கோலாலம்பூர்: அம்னோவின் உச்சமட்டக் குழு உறுப்பினர் லோக்மான் நூர் அடாம், மலாயா பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய விவகாரம் குறித்து, அரசாங்க தலைமை வழக்கறிஞருக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக காவல் துறைத் தலைவர் முகமட் புசி கூறினார். இந்த விவகாரம் குறித்து 26 வாக்குமூலங்கள் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அரசாங்க வழக்கறிஞர்களின் அறிவுரையின்படி, லொக்மான் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் அவர் கூறினார். ஆயினும், இது குறித்த முழு அறிக்கை இன்று திங்கட்கிழமை காவல் துறை வெளியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளியன்று, லொக்மான், நஜிப்க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மலாயா பல்கலைக்கழக மாணவர்கள் வைத்திருந்த அட்டைகளை கிழிப்பதுவும், மாணவர்களை தாக்க முயன்றதும் காணொளியில் இடம் பெற்றிருந்தது.