Home நாடு “நூருல் இசா கருத்தில் எனக்கும்தான் வருத்தம்” – மகாதீர்

“நூருல் இசா கருத்தில் எனக்கும்தான் வருத்தம்” – மகாதீர்

1342
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அண்மையில் சில ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மகளுமான நூருல் இசா, மகாதீரின் சர்வாதிகாரப் போக்கு குறித்து சில கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற பொதுக் கணக்காய்வுக் குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் நூருல் விலகினார். எதிர்க்கட்சித் தலைவரை பொதுக் கணக்காய்வு குழுத் தலைவராக நியமிப்போம் என்ற நம்பிக்கைக் கூட்டணி வாக்குறுதிக்கு மாறாக, பெர்சாத்து கட்சிக்கு மாறிய அம்னோவின் ரொனால்ட் கியாண்டி தொடர்ந்து நாடாளுமன்ற பொதுக் கணக்காய்வுக் குழுத் தலைவராக நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்தார்.

மகாதீருடன் மீண்டும் இணைந்து பணி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டதில் தான் மனமுடைந்து போயிருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினராக இதுவே தமது கடைசித் தவணை என்றும் நூருல் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளுக்கிடையே இது சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பலரும் நூருல் இசாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மகாதீர், “அவர்கள் என்மீது வருத்தம் அடைந்திருக்கிறார்கள். நானும்தான் அவர்கள் மீது வருத்தம் அடைந்திருக்கிறேன்” என்று கூறினார்.

எனினும் மேலும் இதுகுறித்து அவர் விளக்கவில்லை.

நூருல் வெளியிட்டு வருவது அவரது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும், அது அன்வாரின் மனக் குரலா – அல்லது ஒட்டுமொத்த பிகேஆர் கட்சியினரின் இதயக் குமுறலா – என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த சர்ச்சைகள் மூலம் நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளுக்கிடையே சற்றே விரிசல் கண்டிருப்பது போன்ற வெளித் தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.