Home நாடு மஇகா- பாஸ் இணைப்பு, அரசியலில் புதிய அத்தியாயம்!

மஇகா- பாஸ் இணைப்பு, அரசியலில் புதிய அத்தியாயம்!

1234
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ கட்சிக்குப் பிறகு, பாஸ் கட்சியுடனான இணைப்பில் மஇகாவும் நேற்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக இணைந்து செயல்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. மஇகா தலைமையகத்திற்கு வருகைப் புரிந்த பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் அவாங் ஹாடி, தேசிய முன்னணி கட்சிகளுடனான இந்த ஒத்துழைப்பு அரசியல் சூழ்நிலையில் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வருகிற ரந்தாவ் இடைத்தேர்தலில் மட்டுமில்லாமல் இனி நடக்க இருக்கும் தேர்தல்களிலும், தேசிய முன்னணி, பாஸ் கட்சியுடன் இணைந்து செயல்படும் என மஇகா கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சந்திப்பில், பல்வேறு சமூகங்களைக் கொண்டு இயங்கும் தேசிய முன்னணி கூட்டணியில், இனி பாஸ் கட்சியும் இணைந்து அனைத்து மக்களின் நலனையும் பாதுகாப்பதில் முனைப்புக் காட்டும் என ஹாடி கூறினார். பாஸ் கட்சி ஒரு போதும் இஸ்லாம் அல்லாதவர்களின் நலனுக்கு தீங்கு ஏற்படும் வகையில் நடந்ததில்லை எனவும், பிற இனங்களின் நலனில் பாஸ் கட்சி என்றுமே அக்கறை செலுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

சிலர், பாஸ் கட்சியின் நடவடிக்கைகளை பிற இனங்களுக்கும், மதங்களுக்கும் எதிராக சுட்டிக் காட்டினாலும், அவற்றில் நாங்கள் கவனம் செலுத்தப் போவதில்லை என ஹாடி குறிப்பிட்டார்.

“இந்நாட்டு அரசியலில் அம்னோ, பாஸ், மஇகா, மசீச ஆகிய கட்சிகள், முக்கிய முன்னோடி கட்சிகளாகும். இந்நான்கு அரசியல் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் இணைந்து செயல்படுவதன் மூலம் நாட்டின் அரசியலில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படும்” என அவர் குறிப்பிட்டார்.

மஇகா கட்சியுடன் இணைந்து செயல்படுவதில் பாஸ் கட்சி பெருமிதம் கொள்வதாகவும், வருங்காலங்களில் பாஸ் கட்சி இந்திய சமூகங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதிபடுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.