Home நாடு “விரைவில் வருகிறது…அடையாள ஆவண சிக்கலுக்குப் பொருத்தமான தீர்வு” – வேதமூர்த்தி

“விரைவில் வருகிறது…அடையாள ஆவண சிக்கலுக்குப் பொருத்தமான தீர்வு” – வேதமூர்த்தி

1611
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாடற்ற பிள்ளைகளும் அடையாள ஆவணமற்ற மலேசியர்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு பொருத்தமான தீர்வை எட்டுவதன் தொடர்பில் நம்பிக்கை கூட்டணி அரசு உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் ‘செனட்டர்’ பொன்.வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.

அதிகமானவர்கள் குறிப்பாக இந்தியர்கள் இப்படி அடையாள ஆவணமின்றி இருப்பதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. பெற்றோரின் குடியுரிமைச் சிக்கல், (சுதந்திரத்திற்கு முன் தேதியிட்ட) பத்திரங்களுக்கு போதுமான ஆதார ஆவணமின்மை, வறுமை நிலை, கைவிடப்பட்ட குழந்தைகள், தம்பதியரில் ஒருவருக்கு ஆவணச் சிக்கல் இருந்தால் திருமணத்தை பதிவு செய்யாமை, தெளிவின்மை உள்ளிட்ட ஏராளமான காரணங்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.

இப்படிப்பட்டவர்கள் அடுத்தவரின் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுதல், பல சந்தர்ப்பங்களில் புறக்கணிக்கப்படுதல், சில வேளைகளில் வன்முறைக்கு முகங்கொடுக்க நேருதல், கல்வி வாய்ப்பு மற்றும் சுகாதார வசதி போன்றவை, கைகூடாமை, சமூக-பொருளாதார அவல நிலைக்கு ஆளாகுதல், மற்றவர்-களின் அச்சுறுத்தலுக்கும் சுரண்டலுக்கும் அடிபணிதல் என்றெல்லாம் பாதிக்கபடுவதைப் பற்றி நம்பிக்கைக் கூட்டணி அரசும் விழிப்படைந்துள்ளது; இதில் வேலை வாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து குற்ற நடவடிக்கைக்கு இப்படிப்பட்டவர்கள் ஆளாவதையும் அரசு ஆழமாக பரிசீலித்து வருகிறது என்றும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பிரதமர் துறையின்கீழ் செயல்படும் மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான ‘மித்ரா’, அடையாள ஆவண சிக்கல் தொடர்பாக இதுவரை மேற்கோண்ட ஆய்வின்படி பத்து பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ளதுடன், இத்தகைய சிக்கலுடன் போராடுபவர்களுக்கு தற்போதைய சட்ட நடைமுறைக்கு உட்பட்டு கூடிய விரைவில் அடையாள ஆவணம் பெற்றுக் கொடுத்தல் என்னும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப அடையாள ஆவணப் பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வு காணும் பொருட்டு ஓர் இலக்கு நிர்ணயித்து அதன்படி மித்ரா காரியமாற்றுகிறது.

தற்போது நடைமுறையில் இருக்கும் கூட்டரசு அரசியல் சாசன விதிகளின்படி அரச ஊழியகளின் செயல்பாடும் முடிவெடுக்கும் அதிகாரமும் வரையறுக்கப்பட்டுள்ளன. எது எவ்வாறாயினும், ‘தேர்தல் வாக்குறுதிப்படி அடையாள ஆவணச் சிக்கலுக்கு நம்பிக்கைக் கூட்டணி அரசு விரைந்து தீர்வு காணவேண்டும்’ என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்ப்பதை அரசும் உணர்ந்துள்ளது.

தற்பொழுது, இதற்கான பணிகள் ஒரு நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ள சூழலில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.