கோத்தா கினபாலு: கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, நாட்டில் அதிகப்படியான இடைத் தேர்தல்கள் நடந்து வரும் வேளையில், சாண்டாக்கானிலும் இடை தேர்தல் நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை, சபா மாநில சாண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினரும், மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சருமான டத்தோ ஸ்டீபன் வோங் தியேன் பாட் மாரடைப்பால் காலமானார். அதனைத் தொடர்ந்து, அங்கு இடைத் தேர்தல் நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வோங், மக்களுக்காக கடுமையாக உழைக்கக் கூடியவர் என மாநில பிரதிநிதிகள் புகழாராம் சூட்டி உள்ளனர். இரண்டு தவணைகள் சண்டாக்கானின் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பை ஏற்றிருந்த வோங், தனது பணிகளை சிறந்த முறையில் செயலாற்றி வந்தார் என ஜசெக கூறியுள்ளது.
இதனிடையே, சண்டாக்கானில் இடைத் தேர்தல் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டில் இன ரீதியிலான அரசியல் தலையெடுத்துள்ள வேளையில், சபாவில் அதற்கு இடமில்லை என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக வோங் நியமிக்கப்பட்டார். மேலும், அவருக்கு சுகாதாரம் மற்றும் மக்கள் நலத்துறை பொறுப்பும் வழங்கப்பட்டது.