துபாய் – இதுநாள் வரையில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம்தான் உலகின் அதிக இலாபகரமான நிறுவனமாகப் பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட சவுதி அரேபியாவின் அரசு சார்பு எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவின் கணக்கறிக்கைகளின்படி அந்நிறுவனம்தான் தற்போது உலகிலேயே அதிக இலாபகரமான நிறுவனமாக கணிக்கப்படுகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் மட்டும் சவுதி அராம்கோ நிறுவனத்தின் நிகர வருமானம் 111 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்தத் தொகை, ஆப்பிள் மற்றும் மற்றொரு எண்ணெய் நிறுவனமான எக்சோன் மோபில் கொர்ப்பரேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த வருமானத்தை விட அதிகமானதாகும்.
வரிகள், இதர செலவினங்களுக்கு முன்பாக சவுதி அராம்கோ மொத்தம் 212 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியது. இந்தத் தொகை ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளின் இராணுவ செலவினங்களுக்கு இணையான தொகையாகும்.
சவுதி அரேபியாவின் தேசிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் 69.1 பில்லியன் டாலர் மதிப்புடைய பங்குடமையைக் கொள்முதல் செய்யும் நோக்கில் சவுதி அராம்கோ 10 பில்லியன் டாலர் நிதிப் பங்குகளை (பாண்ட்) விற்பனை செய்யவிருக்கின்றது. இந்த விற்பனைக்கான முதலீட்டாளர்களைக் கவரும் நோக்கில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் சவுதி அராம்கோவின் மேற்குறிப்பிட்ட கணக்கு விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.