சிரம்பான்: தம்மீது தேவையற்ற அவதூறுகளை உண்டாக்கியர்களில் பெரும்பாலானோர் மன்னிப்புக் கேட்டு விட்டதாக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தாம் ‘மன்னிப்பு அறை’ ஒன்றினை அறிமுகப்படுத்தினாலும் ஆச்சரியம் இல்லை என நகைத்துப் பேசினார்.
முன்பு, தம்மை கேவலமாகவும், ஏளனமாகவும் பேசியவர்கள் அவர்களாகவே முன்வந்து, மன்னிப்புக் கேட்பது, உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறது எனக் கூறினார்.
ஒருவேளை இதே மாதிரியான எண்ணம் மக்களிடத்தில் இருந்திருந்தால் கடந்த 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிப் பெற்றிருக்கலாம் என அவர் கூறினார்.
“ஒரு சிலரின் சுயநலம், மற்றும் நாட்டினை கைபற்றும் குணத்தால், நான் குற்றவாளியாக்கப்பட்டுள்ளேன்” என முன்னாள் பிரதமர் கூறினார்.
“உண்மை வெளிவரும் போது, மக்கள் என்னை நம்புவார்கள். தற்போது, அவர்கள் (நடப்பு அரசு) கூறிய அனைத்து பொய்களும் வெற்றிப் பெற்றது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தினாலும், இறுதியில் பொய்கள் தனித்து நின்று, நான் குற்றமற்றவன் என மக்கள் கூறும் காலம் வரும்” என நஜிப் தெரிவித்தார்.