Home நாடு ரந்தாவ்: தேமுவுக்கு வெற்றி வாய்ப்பு, நடப்பு அரசு மக்கள் நலனில் கவனம் செலுத்தும் நேரம்!

ரந்தாவ்: தேமுவுக்கு வெற்றி வாய்ப்பு, நடப்பு அரசு மக்கள் நலனில் கவனம் செலுத்தும் நேரம்!

830
0
SHARE
Ad

ரந்தாவ்: வருகிற சனிக்கிழமை நடக்க இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் முகமட் சுக்ரி ஷுயிப் கூறினார்.

தேசிய முன்னணிக்கு எதிராக பல்வேறு காரணங்கள் முன் நிறுத்தப்பட்டாலும், நம்பிக்கைக் கூட்டணியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மக்களை பெரிதும் பாதித்துள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் நஜிப்பின் 1எம்டிபி விவகாரம், முன்னாள் அரசாங்க அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வரும் வேளையில், மக்களின் நலனில் அரசு கவனத்தை இழந்து வருவதாக மக்கள் கருதுகின்றனர்.

முகமட் பாயிஸ் எனும் முகநூல் பயனர் ஒருவர் கூறுகையில், முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மீதான நடவடிக்கைக்கு, அரசாங்கத்திற்கு தாம் நன்றி கூறுவதாகவும், இம்மாதிரியான நடவடிக்கைகளை அரசு செயல்படுத்துவதில் தமக்கு மனநிறைவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், மக்களின் எதிர்பார்ப்பு இதுவல்ல. நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் அமர்வதற்கு முன்பதாக வெளியிடப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள், தற்போது நிறைவேற்றப்படவில்லை. இதுவே, மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

ஜெயசேகரன் அண்ணாதுரை எனும் மற்றொரு முகநூல் பயனர் கூறுகையில், இந்தியர்களின் நெடு நாள் ஏக்கங்களுக்கு மருந்தாக, நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நம்பிக்கைக் கூட்டணி அரசு ஆட்சியில் அமர்ந்து 11 மாதங்கள்தான் ஆகிறது எனவும், அவர்களுக்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, இணையச் செய்திகளில் பின்னூட்டம் இடுபவர்களின் பெருவாரியாக, தற்கால அரசை எதிர்த்தே கருத்துகளை பதிவிட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. அவர்களில் பெரும்பாலும்  மலாய்க்காரர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு எதிராக தங்களின் அதிருப்தியை எல்லா விதமான செய்திகளிலும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

அம்னோ- பாஸ் கட்சிகளின் இன ரீதியிலான நடவடிக்கைகள் இதனை மேலும் துரிதப்படுத்தி இருப்பதாகக் கவனிக்கப்படுகிறது. சீ பீல்ட் கோயில் விவகாரம், தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணம், ஐசெர்ட் போன்ற விவகாரங்கள் நாட்டில் ஒரு வித பதற்றச் சூழலை ஏற்படுத்தும் வண்ணம் ஆகி விட்டது. இதனை அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன என லிம் பூ லியான் எனும் முகநூல் பயனர் தெரிவித்துள்ளார்.

ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல், இதற்கு முன்னர் நடந்த தேர்தலைக் காட்டிலும் முக்கியமான தேர்தலாக கவனிக்கப்படுகிறது என  சுக்ரி ஷுயிப் கூறினார். இந்தத் தேர்தலில், ஒரு வேளை தேசிய முன்னணி வெற்றிப் பெற்றால், நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு விடுத்த பெரிய அளவிலான எச்சரிக்கையாக அது அமையும் என அவர் கூறினார்.  அதுவே நம்பிக்கைக் கூட்டணி வெற்றிப்பெற்றால், சண்டாக்கானில் நடக்க இருக்கும் தேர்தலில் அதன் வீரியத்தைக் காண இயலும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்கால சூழலில், அரசியல் சம்பந்தமான முடிவுகளும், நடவடிக்கைகளும் மக்களுக்கு தேவையற்ற ஒன்றாக ஆகி விட்ட நிலையில் நம்பிக்கைக் கூட்டணி அரசு, பொது மக்களின் நலனில் அதிக அக்கறை செலுத்துவதை மக்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.