கோலாலம்பூர்: பிரபல தொழிலதிபர் ஜி. ஞானராஜா மீண்டும் மலேசிய ஊழல் படுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார். இம்முறை, பண மோசடிக் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே, கொன்சோர்த்தியம் செனிட் கொன்ஸ்ட்ராக்ஷன் செண்டெரியான் பெர்ஹாட்டை ஏமாற்றிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானராஜா, தற்போது 11.4 மில்லியன் ரிங்கிட் பணத்தை உள்ளடக்கிய 68 பண மோசடிக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஞானராஜாவை கைது செய்வதற்கு சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அனுமதி வழங்கியப் பின்பு அவர் கைது செய்யப்பட்டார் என ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிகபடியாக, மேத்தியூ ஓங் அச்சோசியட் வழக்கறிஞர் நிறுவனத்திற்கு சுமார் 2.4 மில்லியன் ரிங்கிட்டும், உள்துறை அமைச்சுக்கு 2.2 மில்லியன் ரிங்கிட்டும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த ஞானராஜா, நீதிபதி ரொசினா அயூப் முன்னிலையில் விசாரணைக் கோரினார். நீதிபதி அவரை 50,000 ரிங்கிட் பிணையில் விடுவித்துள்ளார்.