ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரை யாரென்றே தெரியாது என அப்பகுதி வாழ் மக்கள் கூறியுள்ளதாக பிரி மலேசியா டுடே குறிப்பிட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கு முகமட் ஹசானை தெரியும் அளவிற்கு டாக்டர் ஶ்ரீராமை அடையாளம் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தை கடந்த காலங்களில் வழிநடத்திய முகமட் ஹசானை தமக்கு நீண்ட நாட்களாக தெரியும் எனவும், அவர் இம்மாநிலத்திற்காக செய்த சேவையை மறக்க இயலாது எனவும் 57 வயதுடைய ஜி.சேகர் குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீராமைப் பற்றிக் கேட்கையில், அவரை இந்த தேர்தலின் போதுதான் பார்ப்பதாக கூறியிருந்தார்.
55 வயதுடைய செங் லி ஷா இது குறித்து கருத்துரைக்கையில், தமக்கும் முகமட் ஹசானைத்தான் தெரியும், எனவும், தமது தேர்வாக தேசிய முன்னணி வேட்பாளரான ஹசான்தான் இருப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார். உதவி எனும் போது, முகமட் ஹசான் எந்த ஒரு இனப்பாகுபாட்டையும் பார்க்காதவர் என அவர் தெரிவித்தார்.
கலப்பான கருத்துகள் மக்கள் மத்தியில் காணப்பட்டாலும், பொதுவாக மக்களின் தேர்வாக தற்போது முன்னணியில் இருப்பவர் தேசிய முன்னணி வேட்பாளராக போட்டியிடும் அம்னோவின் இடைக்காலத் தலைவர் முகமட் ஹசான் என்பது தெளிவடைகிறது. நாட்டின் அமைதி, பொருட்களின் விலை ஏற்றம், நம்பிக்கைக் கூட்டணியின் பொய் வாக்குறுதிகள் அனைத்தும் மக்களை சிந்தித்து செயல்பட தூண்டி உள்ளது என்றே கூற வேண்டும்.