ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் தொடங்கியது. செண்டாயான் வான்படைத் தளத்திலும், ரந்தாவ் காவல் நிலையத்திலும் இரண்டு வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டன.
இந்த முன்கூட்டியே வாக்களிப்பில் 110 இராணுவர்களும், காவல் துறையினரும் வாக்களிக்க உள்ளனர். மேலும், எட்டு பேர் அஞ்சல் வழி தங்களது வாக்குகளைச் செலுத்த உள்ளனர்.
நான்கு மணி நேரத்திற்குத் திறக்கப்பட்ட வாக்குச் சாவடி மதியம் 12 மணி அளவில் மூடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இம்முறை, தேசிய முன்னணி சார்பில் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் போட்டியிட, அவரை எதிர்த்து நம்பிக்கைக் கூட்டணி சார்பில் பிகேஆர் கட்சியின் டாக்டர் எஸ்.ஸ்ரீராம் களமிறங்குகிறார். இவர்களைத் தவிர ஆர்.மலர் என்ற இந்தியப் பெண்மணியும், முகமட் நோர் ஹசான் என்பவரும் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர்.