சென்னை, ஏப்.3-காங்கிரசில் உள்ள பலருக்கு, அக்கட்சி வரலாறு தெரியவில்லை,” என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில், நேற்று முன்தினம், உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கையின் மீது பேசிய, அத்துறை அமைச்சர் முனுசாமி, “நாடு விடுதலை அடைந்ததும், காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும்’ என, காந்தி கூறியதாகத் தெரிவித்தார். இதற்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் விஜயதாரணி, பிரின்ஸ் ஆகியோர், “காந்தி அப்படிக் கூறவில்லை’ என கூறினர்.
இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் நேற்று பேசியதாவது: மகாத்மா காந்தி, 1948, ஜன., 30ம் தேதி கொல்லப்பட்டார். அதற்கு ஒரு நாள் முன், காங்கிரஸ் கட்சியின் வரைவு சட்ட விதிகளை அவர் எழுதினார். இச்சட்ட விதிகள், காந்தி கொலைக்கு பிறகு, காங்கிரஸ் பொதுச் செயலர் ஆச்சார்யா ஜுகல் கிஷோரால், 1948, பிப்., 7ம் தேதி வெளியிடப்பட்டது. மேலும், மகாத்மா காந்தியின் ஒருங்கிணைந்த பணிகள் என்ற புத்தகத்தில் உள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையால் வெளியிடப்பட்ட புத்தகத்துக்கு, முன்னாள் பிரதமர் இந்திரா, முன்னுரை எழுதிஉள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள வரைவு சட்ட விதிகளில், “காங்கிரஸ் காலாவதியாகி விட்டது’ என, காந்தி எழுதியுள்ளார். மேலும், “பல காரணங்களுக்காக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, காங்கிரஸ் அமைப்பை, கலைத்து விடுவது என, முடிவு செய்கிறது’ என்றும், மகாத்மா காந்தி எழுதியுள்ளார். இது, அதற்கான ஆதாரமாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியிலே உள்ள பலருக்கு, காங்கிரஸ் பற்றிய வரலாறே தெரியாமல், பேசிக் கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.