கோலாலம்பூர்: கிழக்குக் கரை இரயில் திட்டம் (இசிஆர்எல்) திட்டமிட்டபடி குறைந்த விலையில் தொடரப்படும் என பிரதமர் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தது.
கடந்த பல மாதங்களாக புத்ராஜெயாவும், பெய்ஜிங்கும் நடத்திய பேச்சுவார்த்தையின் காரணமாக, இந்த திட்டத்தின் செலவு குறைக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் கட்ட கட்டுமான செலவுகள் சுமார் 21.5 பில்லியன் ரிங்கிட் குறைக்கப்பட்டுள்ளதை அது குறிப்பிட்டுள்ளது. தற்போது, 44 பில்லியன் ரிங்கிட் செலவில் அத்திட்டம் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முந்தையச் செலவானது 65.5 பில்லியன் ரிங்கிட்டாக கணக்கிடப்பட்டிருந்தது.
“இந்தக் குறைப்பினால் மலேசியாவிற்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், நாட்டின் நிதி சுமையும் குறைக்கப்பட்டுள்ளது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட இந்த உடன்படிக்கை குறித்த விவரங்கள் வருகிற திங்களன்று அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் நிதி மந்திரி டைம் சைனுடின் புத்ராஜெயாவைப் பிரதிநிதித்து, தற்போது பெய்ஜிங்கில் இது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த திட்டம் வாயிலாக கிள்ளான் துறைமுகத்திலிருந்து, கிளந்தானை இணைக்கும் சுமார் 688 கிலோமீட்டர் இரயில் பாதை அமைக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது.