ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் வாக்களிப்பு தற்போது நடந்துக் கொண்டிருக்கையில், மதியம் 2 மணி நிலவரம்படி சுமார் 61 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மாலை 5.30 அளவில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், சுமார் 76 விழுக்காட்டினர் வாக்களிப்பர் என தாம் நம்புவதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு 14 மையங்களில் தொடங்கியது. 53 வாக்களிப்பு வரிசைகள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியிருக்கின்றன.
20,793 மொத்த வாக்காளர்களைக் கொண்டுள்ள இந்தத் தொகுதியின் 11 வாக்காளர்கள் ஏற்கனவே, அஞ்சல் மூலம் வாக்களித்து விட்டனர். 110 முன்கூட்டியே வாக்களிப்பவர்களில் 96 விழுக்காட்டினர் கடந்த செவ்வாய்க்கிழமையே தங்களின் வாக்குகளைச் செலுத்தி விட்டனர்.
தேசிய முன்னணி சார்பில் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் போட்டியிட, அவரை எதிர்த்து நம்பிக்கைக் கூட்டணி சார்பில் பிகேஆர் கட்சியின் டாக்டர் எஸ்.ஸ்ரீராம் களமிறங்கி இருக்கிறார். இவர்களைத் தவிர ஆர்.மலர் என்ற இந்தியப் பெண்மணியும், முகமட் நோர் ஹசான் என்பவரும் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர்.