கோலாலம்பூர்: கடந்த பத்து ஆண்டுகளாக இந்திரா காந்தியின் இளைய மகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தோல்வியைக் கண்ட, காவல் துறையினர், சிறப்புப் படை அமைத்து, பிரசன்னா டிக்ஸாவையும், இந்திரா காந்தியின் முன்னாள் கணவரையும் தேட இருப்பதாக இந்திரா காந்தி அதிரடி அமைப்பின் தலைவர் அருண் துரைசாமி கூறினார்.
“பிரசன்னாவை மீண்டும் கண்டுபிடிப்பது மட்டுமே எங்களது நோக்கம்” என அவர் கூறினார்.
நேற்று மாலை உள்துறை அமைச்சர் மொகிதின் யாசினுக்கு மனு ஒன்றினை வழங்குவதற்கு முன்பதாக நிருபர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். மலேசிய காவல் துறைத் தலைவர் முகமட் புசி ஹருண், இது குறித்து தெரிவித்ததாக அருண் கூறினார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு, பிரசன்னா 11 மாதக் குழந்தையாக இருக்கும் போது, முகமட் ரிட்சுவான் அவரைக் கடத்திக் கொண்டுச் சென்றார். தற்போது, பிரசன்னாவிற்கு 11 வயது. ஆயினும், இந்த விவகாரம் குறித்து தற்போதைக்கு காவல் துறையினரிடம் எந்த ஒரு தகவலும் இல்லை என அருண் தெரிவித்தார்.