கோலாலம்பூர்: நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சு கட்டம் கட்டமாக நீர் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருந்தது. ஆயினும், இந்த நடைமுறையானது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு (பி40) சுமையாக இருக்காது என நீர் மற்றும் கழிவுநீர் சேவைத் துறை செயலாளர் டாக்டர் சிங் டு கிம் கூறியுள்ளார்.
இந்தக் கட்டண அதிகரிப்பு, பெரும்பாலான மலேசியர்கள் செலுத்துகிற மற்ற பயன்பாட்டு செலவுகளை விட குறைவாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, நீர், நில மற்றும் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், நுகர்வோருக்கு தரமான சேவை மற்றும் விநியோகத்தை உறுதிப்படுத்த நீர் கட்டணத்தை உயர்த்த ஆறு மாநிலங்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
20 ஆண்டுகளுக்கு திருத்தம் செய்யப்படமால் இருந்ததால், நீர் கட்டணத்தை உயர்த்துவதில் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நீரை தவறாக அல்லது விரயம் செய்வோருக்கு எதிராக அதிகமான நீர் கட்டணங்கள் விதிக்கப்படும் என சிங் குறிப்பிட்டுக் கூறினார்.
இந்த விவகாரத்தினால் குறைவான வருமானம் பெறும் தரப்பினரின் வாழ்வு பாதிக்கப்படாமல் இருப்பதை அமைச்சும் மாநில அரசும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.