கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்பான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் பலரது முகத்திரை கிழிக்கப்படும் என்று அவரது தலைமை வழக்கறிஞரான முகமட் ஷாபி அப்துல்லா நேற்று வியாழக்கிழமை கூறினார்.
இந்த வழக்கில் நஜிப் ஏமாற்றப்பட்டுள்ளார் என்பதை கூடிய விரைவில் தெரியவரும் என அவர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் குறிப்பிட்டவாறு நஜிப் எவருக்கும் வங்கி பரிவர்த்தனைகள் குறித்து உத்தரவு வழங்கவில்லை எனவும், இந்த விவகாரத்தில் அவர் பலிகாடாக ஆக்கப்பட்டுள்ளார் எனவும் ஷாபி கூறினார்.
வங்கி பரிவர்த்தனைகள் குறித்த அறிக்கைகள் நஜிப்புக்கும் அவரது இருப்பிடத்திற்கும் அனுப்பக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் உரையாடல்கள் இதனை நிரூபிக்கும் என அவர் கூறினார். அம்பேங்க் வங்கியின் மக்கள் தொடர்பு நிருவாகி ஜொஹான்னா யூ மற்றும் இதர அதிகாரிகளின் உரையாடல்களில், பிரதமர் துறைக்கு இது குறித்து தெரியப்படுத்த வேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.