Home நாடு மெட்ரிகுலேஷன்: கேட்டதைக் கொடுக்காது, நாடகமாடும் நம்பிக்கைக் கூட்டணி!

மெட்ரிகுலேஷன்: கேட்டதைக் கொடுக்காது, நாடகமாடும் நம்பிக்கைக் கூட்டணி!

1342
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புக்கான இட எண்ணிக்கை 25,000 -லிருந்து 40,000-ஆக உயர்த்தப்பட்டிருந்தாலும், இந்திய மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் வழங்கப்படும் என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.

இந்த விவகாரம் குறித்து மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், இந்தியர்களுக்கு 2,200 இடங்கள் தரப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது எதனை அடிப்படையாகக் கொண்டது என மலேசிய நண்பன் நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பேச வேண்டிய கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் இன்னும் வெளிப்படையாக இந்திய மாணவர்களுக்கு கொடுக்கப்பட் இருக்கும் இடங்களைப் பற்றி எந்த ஓர் அதிகாரப்பூர்வமான தகவல்களையும் வெளியிடவில்லை என்பதே உண்மை.

#TamilSchoolmychoice

2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுக்கான மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் இந்திய மாணவர்களின் இட ஒதுக்கீடு கணிசமாக குறைக்கப்பட்டதன் விளைவாக, இந்தியர்களின் கோபத்திற்கு ஆளான கல்வி அமைச்சு, அமைச்சரவையில் இது குறித்து பேசி முடிவு எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே, கடந்த புதன்கிழமை மேலும், 15,000 இடங்கள் ஒதுக்கப்படுவதாகக் கூறியது. ஆயினும், அந்த அறிவிப்பானது மேலும் ஒரு தலைவலியாய் இந்தியர்களுக்கு அமைந்தது. அவ்வாறு வழங்கப்ப்பட்ட கூடுதல் எண்ணிக்கையிலிருந்து 90 விழுக்காடு இடங்கள் மீண்டும் பூமிபுத்ரா மாணவர்களுக்கு வழங்கப்படும் என அது குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், இந்தியர்கள் மத்தில் பெரும் கோபம் ஏற்பட்டுள்ளது. வாய் திறந்து ஒன்றுமே கேட்காதவர்களுக்கு 13,500 இடமும், சிறப்பான தேர்ச்சிகள் பெற்றும் இடமே கிடைக்காதவர்களுக்கு வெறும் 1,500 இடம் கொடுக்கப்பட்டது குறித்து மக்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இந்த 1,500 இடங்களில் இந்திய மாணவர்களுக்கு எப்படி கூடுதல் இடங்கள் வழங்கப்பட்டு, அமைச்சர் குலசேகரன் கூறியது போல 2,200 இடங்கள் கொடுக்கப்படும் என்பது கேள்வியாக அமைந்துள்ளது.

தேசிய முன்னணி காலத்தில் வழங்கபட இருந்த 2,200 இடங்களை வழங்கியிருந்தாலே இந்த விவகாரத்திற்கு விடிவுக் காலம் பிறந்திருக்கும். அதனை விடுத்து, தேவையற்ற கூடுதல் 15,000 இடங்களை வழங்கி, அதிலிருந்து பூமிபுத்ரா மாணவர்களுக்காக கூடுதல் 13,500 இடங்கள் ஒதுக்கியது அரசாங்கத்தின் ஒருதலைபட்சமான நடவடிக்கையாக கருதப்பட வேண்டும்.

இந்தியர்களின் நியாயமான கேள்விகளைக்கூட புரிந்து கொள்ளாது, அவர்களை மீண்டும் கேள்விகள் கேட்கும் வகையில் ஒரு தலைபட்சமான முடிவினை வழங்கிய கல்வி அமைச்சின் இந்த முடிவானது நம்பிக்கைக் கூட்டணியின் தோல்வியாகவே குறிப்பிட வேண்டும்.

இந்தியர்களின் தற்போதையக் கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் எம்மாதிரியான பதிலைக் கூறப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.