கோலாலம்பூர்: தமது தலைமைத்துவத்தின் மீதான மதிப்பீடு அடுத்து வரக்கூடிய பொதுத் தேர்தலில் வெளிப்படும் என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். அதுவே அதனை நிரூபிக்கும் உண்மையான களமாக அமையும் என அவர் கூறியுள்ளார்.
“நாம் ஓர் அரசாங்கமாக மாறும்போது, நம்மை பலர் விமர்சிப்பார்கள், புகழை இழக்கவும் நேரிடும்” என அவர் கூறினார்.
“எனினும், தேர்தல்கள் காலங்களில் நாட்டை நிர்வகிப்பதற்கு யார் சரியானவர் என்பதை வாக்காளர்கள் மதிப்பீடு செய்வார்கள்” என மகதீர் தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு இருந்த ஆதரவு தற்போதில்லை என பெர்டெகா செண்டர் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அந்த கருத்துக் கணிப்பில் மகாதீருக்க்கான ஆதரவு குறைந்துள்ளதை அது குறிப்பிட்டுள்ளது.
46 விழுக்காடு மக்கள் மட்டுமே மகாதீரின் தலைமைத்துவத்தில் திருப்தி அடைந்துள்ளனர் என்றும், 39 விழுக்காட்டினர் மட்டுமே நம்பிக்கைக் கூட்டணி அரசின் மீது திருப்தி அடைந்துள்ளனர் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.