Home நாடு வரலாற்றில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் – உப்சி பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கம்

வரலாற்றில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் – உப்சி பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கம்

1446
0
SHARE
Ad

தஞ்சோங் மாலிம் – மஇகாவின் 6-வது தேசியத் தலைவராக பதவி வகித்து தனது பதவிக் காலத்தில் பல்வேறு அரசியல், சமூக, கல்வி, பொருளாதாரத் துறை பங்களிப்புகளை வழங்கி வரலாற்றில் முத்திரை பதித்தவர் அமரர் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம்.

அவரது பங்களிப்புகளையும், சாதனைகளையும் பல்வேறு அரசியல் பார்வையாளர்கள், பிரமுகர்களின் கண்ணோட்டத்தில் கட்டுரைகளாக வடித்து அண்மையில் தமிழவேள் கோசா அறவாரியத்தின் ஆதரவில் நூலாக வெளியிட்டார், டான்ஸ்ரீ க.குமரன். மாணிக்கவாசகத்தின் காலகட்டத்தில் அரசியலில் பயணம் செய்த குமரன், அவரோடு இணைந்து பணியாற்றியவர் என்பதோடு, மஇகாவின் உதவித் தலைவராகவும், துணையமைச்சராகவும் சேவையாற்றியவர்.

டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் முகப்பு

அந்த நூலை அடிப்படையாக வைத்து உப்சி எனப்படும் தஞ்சோங் மாலிமில் அமைந்துள்ள சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக் கழகத்தில், தமிழவேள் கோசா அறவாரியமும் உப்சி பல்கலைக் கழக வளர் தமிழ் மன்றமும் இணைந்து  “வரலாற்றில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை நடத்துகின்றன.

#TamilSchoolmychoice

எதிர்வரும் சனிக்கிழமை மே 4-ஆம் தேதி பிற்பகல் 2.00 மணி தொடங்கி, மாலை 5.00 மணிவரை உப்சி பல்கலைக் கழகத்தின் இ-லெர்னிங் விரிவுரை மண்டபத்தில் (E-learning lecture hall) இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

பொதுமக்களும், உப்சி பல்கலைக் கழக மாணவர்களும் கலந்து கொள்ளும் இந்தக் கருத்தரங்கை மேனாள் காவல் துறை ஆணையர் டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் தொடக்கி வைக்கிறார். நிறைவு விழாவில் மாணிக்கவாசகத்தின் சகோதரர் டத்தோ வி.எல்.காந்தன், உப்சி பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பகுதித் தலைவர் முனைவர் மனோன்மணி தேவி, மாணிக்கவாசகம் தொகுப்பு நூலாசிரியர் டான்ஸ்ரீ குமரன், ஆகியோர் சிறப்புரை வழங்குவர்.

மஇகா தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றி இந்தக் கருத்தரங்கத்தை நிறைவு செய்து வைப்பார்.

டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் சேவைகள், பங்களிப்புகள் குறித்து ‘டான்ஸ்ரீ மாணிக்கவாசகம்’ நூலின் கட்டுரையாளர்கள் தங்களின் பார்வையில் மாணிக்கவாசகம் குறித்து இந்தக் கருத்தரங்கத்தில் உரையாற்றுகின்றனர்.

“வணங்காமுடித் தலைவர்” என்ற தலைப்பில் உப்சி பல்கலைக் கழகத்தின் முனைவர் இளங்குமரன், “சமுதாயப் பங்களிப்பு” குறித்து மன்னர் மன்னன் மருதை, “ஆளுமைகள்” என்ற தலைப்பில் மலாயாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் கிருஷ்ணன் மணியம், “அரசியல் பங்களிப்பு” என்ற தலைப்பில் செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் ஆகியோர் இந்தக் கருத்தரங்கத்தில் உரையாற்றுகின்றனர்.

உப்சி பல்கலைக் கழகத்தின் வளர்தமிழ் மன்றத் தலைவர் சுகன் சந்திரன் வரவேற்புரையோடு தொடங்கும் இந்தக் கருத்தரங்கில் அம்மன்றத்தின் செயலாளர் தினேஸ்வரி முனியாண்டி நன்றியுரை வழங்குவார்.