கோலாலம்பூர்: புத்ராஜெயாவிற்கும் ஜோகூர் அரண்மனைக்கும் இடையிலான மோதல் காரணமாக ஜோகூர் மாநில மக்களுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய அரசியல் கட்சியை அமைப்பதில் அரண்மனை தரப்பு முடிவு செய்துள்ளதாக நம்பத்தக வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
அந்த அரசியல் கட்சியின் பெயர் பார்டி பங்சா ஜோகூர் (Parti Bangsa Johor) என பெயர் சூட்டப்படலாம் என டி மலேசியன் இன்சைட் செய்தித் தலத்தில் இடம்பெற்றுள்ளதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
ஜோகூரில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளுடனான பல சந்திப்புகளுக்குப் பிறகு ஒரு புதிய கட்சியை அமைப்பதற்கான யோசனை எழுந்துள்ளதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
மற்ற மாநிலங்களிலிருந்து எந்தவொரு தலையீடும் இல்லாமல் ஜோகூரை, அதன் மக்களே நிர்வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த புதிய கட்சி உருவாக்கப்பட உள்ளதாக அது குறிப்பிட்டது.
“இந்த சந்திப்புக் கூட்டத்தில், மக்கள் ஏன் இனியும் அரச அமைப்புக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பது பற்றி பேசப்பட்டது. அதனை சரி செய்ய புதிய அரசியல் கட்சி தொடங்க யோசனை எழுந்தது. ஜோகூர் அரண்மனைக்கு மக்களிடமிருந்து ஆதரவு உள்ளது. ஜோகூர் விவகாரங்களில் பிரதமர் தலையீடு ஜோகூர் மக்களுக்கு பிடிக்கவில்லை. ஆகவே, இனி இம்மாநிலத்தைச் சார்ந்தவர் மட்டுமே ஜோகூரை ஆட்சி செய்ய வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மகாதீர் முகமட் மட்டும் துங்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயிலுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மலாய் ஆட்சியாளர்களுக்கும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆயினும், புத்ராஜெயா மற்றும் ஜோகூர் அரண்மனைக்கும் இடையிலான உறவில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.