Home நாடு சாம்ரி வினோத்: கருத்துணர்ந்து, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடப்பதே மரியாதை!

சாம்ரி வினோத்: கருத்துணர்ந்து, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடப்பதே மரியாதை!

1617
0
SHARE
Ad
முகமட் சாம்ரி வினோத்

மனிதனுக்கு மதத்தின் பால் உள்ள பற்றும் தீவிரமும் அதன் எல்லையை கடந்து செல்லும் போது அதிதீவிரமாகவும் வன்முறையாகவும் மாறலாம். தனிப்பட ஒரு மனிதனின் சுய மதிப்பீட்டின் மீது மற்றவர் வைக்கக்கூடிய கருத்துகளினால் அவை வேறொரு உருவத்தை எடுக்கிறது எனக் கூறலாம். எவ்விதத்திலும் அத்தனி நபர் சம்பந்தப்பட்ட மதமானது அதற்கு பொறுப்பாகாது.

யார் நம்மை எது கூறினாலும் அமைதி காத்து, காலத்திடமும் இயற்கையிடமும் விட்டு விடும் வழக்கம் எங்கே போனது? பற்றற பார்வையோடு மதத்தினை அனுகினால் ‘அன்பு’ மட்டுமே மிஞ்சும்.

பரவலான கருத்துகள் பேசும் ஒருவரின் நோக்கத்தினை ஆராயும் பக்குவத்தினை நம்மில் எத்தனை பேர் கொண்டுள்ளோம்? அவர் உண்மையற்ற கூறுகளை முன்வைத்தாலும், ஒருவேளை அவர் நமது சுய மரியாதையை அவமதித்தால் அதன் வெளிப்பாடு கோபமாகவே முடிகிறது. அவர்களது நோக்கம் அதுவே.

#TamilSchoolmychoice

மதமாற்றம் என்பது இயல்பானதோ எளிதானதோ அல்ல. “தாய் மார்பில் பால் குடித்துக்கொண்டிருக்கிற குழந்தையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எடுப்பது போன்றது, கொடூரமானது” என்கின்றனர் சமூக, உளவியல் வல்லுனர்கள் (சு.பொ.அகத்தியலிங்கம், சாதியம்: வேர்கள், விளைவுகள், சவால்கள்). அப்படியும் மதமாற்றம் செய்ய விழைவது ஏன்?

முதற்காரணம்: தான் பிறந்த மதத்தின் தத்துவத்தையும், இன்னொரு மதத்தின் தத்துவத்தையும் பழுதறக் கற்றுத் தேர்ந்த பின் அந்த மதத்தால் சிந்தனாபூர்வமாக ஈர்க்கப்பட்டு மதம் மாறுவது ஒரு வழக்கம். இது குறிப்பிட்ட நபர்களிடம் மட்டுமே நடக்கும். அதாவது, அறிஞர் பெருமக்கள், தத்துவவாதிகளிடம் மட்டுமே இது நடக்கும். இவ்வாறான மாற்றங்களை தடுப்பது சாத்தியமானது அல்ல. அது மதமாற்றமே அல்ல, மனமாற்றம், அவ்வளவுதான். இவர்களிடத்தில் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் எழாது.

இரண்டாவது காரணம்: சலுகைகள், அதிகார மிரட்டல், ஆதாயங்கள் இவற்றுக்காக மதம் மாறுவது. இவர்கள் எதிலும் உறுதியற்றவர்கள். தங்கள் காரியம் முடிந்ததும் இவர்கள் மீண்டும் வேறொன்றைத் தேடிப் போக மாட்டார்கள் என்பதற்கு எந்த ஓர் உத்தரவாதமும் கிடையாது. இவர்கள் ஒரு மதத்தில் சேர்வதால் அந்த மதத்திற்குப் பெருமையோ, தன் மதத்தை விட்டு நீங்குவதால் அந்த மதத்துக்கு சிறுமையோ ஏற்படாது. இவர்கள் நம்பத்தகாதவர்கள். கண்டுக் கொள்ளாமல் விடப்பட வேண்டியவர்கள்.

மூன்றாவது காரணம்: மிக முக்கியமான காரணமாக இது அமைகிறது. இங்கு மதமாற்றம் ஒரு கலக நடவடிக்கை, ஓர் எதிர்ப்போராட்டம். வேறு வழியே இல்லாமல் கடைசியாகத் தேர்வு செய்யும் ஆயுதம்.

இம்மூன்று காரணங்களில் சாம்ரி வினோத் எந்த காரணத்திற்காக மதம் மாறினார் என்பது நமது நோக்கம் கிடையாது. அது அவருடைய உரிமையும் கூட. அதனைக் கேள்வி கேட்கும் உரிமை எந்தவொரு மனிதருக்கும் கிடையாது.

சாம்ரி வினோத் செய்வது எவ்விதத்தில் நியாயமானது?

முதலில் இப்பேர்பட்டவர்களை தவிர்த்து, ஒதுக்கும் தன்மையை மக்கள் அறிந்திருக்க வேண்டும். பல்வேறு இன மக்கள் மற்றும் மதத்தினைக் கொண்ட நாட்டினில் இப்பேர்பட்டவர் தைரியமாக அவரது கருத்தினை வெளிக்கொணரும் போது அதன் அரசியலை புரிந்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை இது சாம்ரி வினோத் அவர்களுக்கே புலப்படாத விடயமாக இருக்கலாம். இல்லையேல், இவர் புறக்கணிக்கப்பட வேண்டியவரே.   

எடுத்துக்காட்டிற்கு ஒரு சூழல்நிலையை ஏற்படுத்துவோம். நமது வீட்டு குழந்தைகளின் நடவடிக்கைகளை வேறொருவர் சுட்டிக் காட்டி, நீங்கள் உங்கள் குழந்தைகளை இவ்வாறு வளர்த்திருக்கக் கூடாது, வளர்ப்பு சரியில்லை எனக் கருத்தினை முன்வைக்கும் போது, பெற்றோர்களான நமக்கு என்ன தோன்றும்? மிக குறைவானவரே அதனை ஏற்பர். பெரும்பாலானோர், “என் பிள்ளையைப் பற்றி பேசுவதற்கும், வளர்க்கும் விதத்தைப் பற்றி கூறுவதற்கும் உனக்கு என்ன உரிமை உள்ளது?” எனக் கேட்பர். இதே சூழல்தான் சாம்ரி வினோத் விவகாரத்தில் ஏற்பட்டுள்ளது.  நியாயத்தை உறுதியாக நின்று பேசுமிடத்தில் அவரில்லை என்பது அவருக்கே தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு வேளை சாம்ரி வினோத் இதனை கருத்தில் கொண்டிருந்தால் இம்மாதிரியான, சூழல் ஏற்பட வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். குறிப்பிட்ட ஒரு குழுவினருக்கு மட்டும், குறிப்பிட்ட ஒரு வரையறைக்கு ஏற்றவாறு அவர் பேசியது வெளியிடப்படாமல் இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

பொதுவான கண்ணோட்டத்தோடு இதனை கவனிக்க வேண்டும். வெளியில் அனைவரும் மலேசியர்கள் என பெருமை பேசி விட்டு, வீட்டினுள் நுழைந்ததும் மற்ற மதக்காரர்களையும், இனத்தாரையும் கடிந்து பேசும் குணம் எத்தனை பேரிடம் உள்ளது? ஆனால், இது குறிப்பிட்ட ஓர் அடைப்புக்குள் நடந்து முடிந்து விடுகிறது. இதனால் சர்ச்சைகளும் பிரச்சனைகளும் ஏற்படுவது அரிது.

வெளிப்படையாக மற்றவர்களைப் பற்றிய கருத்தினை முன்வைக்கும் போது, எதிர் தரப்பில் இருப்பவர்களை அக்கருத்தானது எந்த விதத்தில் நோகடிக்கும் எனும் நுட்ப சிந்தனை இல்லாதவர்களை பொருட்படுத்துவது நமது நேரத்தை வீணடிப்பதற்கு சமமாகக் கருதுகிறேன்.

இவ்விடத்தில் எவர் மதம் பெரிது எனும் விவாதத்திற்கு இடமே இல்லை. ஒரு கருத்தினை முன்வைப்பதால் நாட்டில் அமைதியற்ற சூழல் ஏற்படுகிறதென்றால், அதனை ஏன் முன்னிலைப்படுத்தி பேச வேண்டும்? யாருடைய சுயநலத்திற்காக இவை யாவும் கட்டமைக்கப்படுகிறது? இடைவிடாது அனைத்துலக அளவில் ஒருவரை ஏமாற்றுகாரர், நிதி மோசடி விவகாரத்தில் தேடப்படுகிறவர், தீவிரவாதிகளுடன் தொடர்பு என அடையாளப்படுத்தியும், எந்த ஆதாரத்தை வைத்து இந்நாட்டு முன்னாள் அரசாங்கம் அப்பேர்பட்டவருக்கு குடியுரிமை வழங்கி சிறப்பித்துள்ளது?

ஜாகிர் நாயக்

இவ்வாறாக கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சாம்ரி வினோத் போன்ற சந்தர்ப்பவாதிகளுடனான வாக்குவாதத்தில் இறங்கினால், கடைசியில் நட்டமாகி நிற்க போவது என்னவோ நாம்தான்.

சாம்ரி வினோத் விவகாரத்தில் என்ன செய்யலாம்?

சாம்ரி வினோத்தின் கருத்தினால் இந்நாட்டு இந்தியர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மை. ஆயினும், அதனை சரி செய்ய இவர்களால் என்ன செய்ய இயலும்? வெளிப்படையாக தாம் இந்து மதத்தினை குறைத்து பேசவில்லை என அவர் குறிப்பிடுகிறார்.

நாம் பேசிய வார்த்தைகளில் தவறுகள் இருப்பின் மன்னிப்புக் கேட்பதே மனிதனின் சிறந்தப் பண்பாகக் கொள்ளப்படுகிறது. அதனைக் கூற விரும்பாத வினோத்தின் மனப்பான்மைக்கு நமது நன்றினை தெரிவித்து, அவரை ஒரு பொருட்டாக எண்ணாது அவரவர் மனிதத் தன்மைகளை இழக்காது இருக்குமாறு கேட்டுக் கொள்ளபடுகின்றனர்.

விவாத மேடைகளை அமைத்து, இவரைப் போன்றோருடனான கருத்து விவாதங்களினால் நட்டமாகி நிற்கப் போகும் நம் வருங்கால சந்ததியினரை சற்று யோசித்துப் பார்க்கலாம். இவர்களுக்கெல்லாம் மூலக் காரணமாக இருந்து செயல்பட்டு வருபரை இந்நாட்டிலிருந்து வெளியேற்றாதவரை சாம்ரி வினோத் போன்ற தனி நபர்கள் உதித்துக் கொண்டேதான் இருப்பர்.

பின்குறிப்பு: சாம்ரி போன்ற தனி நபர்கள் எல்லா மதங்களிலும் உள்ளனர். ஆகவே, அவரவர் குற்றத்தினை மறந்து சுய நலத்திற்காக கருத்துகளை பகிரும் போக்கினை முதலில் தவிர்ப்போம்.   

– நந்தன்