சண்டாக்கான் – பொதுவாக சபா மாநிலத்தில் குறைந்த எண்ணிக்கையிலான இந்தியர்களே உள்ளனர். சண்டாக்கான் இடைத் தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் அங்கு சொற்ப எண்ணிக்கையிலேயே இந்தியர்கள் இருந்தாலும், அதன்மூலம் பல இன மக்களைக் கொண்ட தொகுதியாக சண்டாக்கான் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் எதிர்வரும் மே 11-ஆம் தேதி நடைபெறும் சண்டாக்கான் இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்களின் வாக்குகளும் முக்கியம் என்றும் அவர்களின் நலன்களும் புறக்கணிக்கப்பட மாட்டாது என நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் – போட்டியிடும் ஜசெக வேட்பாளர் விவியன் வோங் (படம்) ஷிர் யி உறுதியளித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (மே3) இங்குள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சண்டாக்கான் இந்திய சமூகத்தினருடனான சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய விவியன் மற்ற இனங்களுடன் இணைந்து இந்திய சமூகத்தினருக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத் தலைவர் கே.கணேசன், சண்டாக்கான் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பட விவியன் வோங் மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டு வருவார் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஒரு பள்ளி ஆசிரியருமான விவியன் வோங் ஓர் சிறந்த மாணவி என வர்ணித்த கணேசன், இளம் வயதினராக இருந்தாலும், மறைந்த அவரது தந்தையைப் போலவே விவியனும் தெளிவான அரசியல் பார்வையைக் கொண்டிருக்கிறார் எனப் பாராட்டினார்.
சண்டாக்கானில் இம்முறை ஐந்து முனை போட்டி நிலவுகிறது. நம்பிக்கைக் கூட்டணி சார்பாக ஜசெக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகளான விவியன் வோங் போட்டியிடும் வேளையில், ஐக்கிய சபா கட்சியைப் பிரதிநிதித்து முன்னாள் பத்து சாபி நாடாளுமன்ற உறுப்பினரான லிண்டா சென் போட்டியிடுகிறார்.
இவர்களை தவிர்த்து மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் இறங்கி உள்ளனர். முன்னாள் அமானா கட்சியின் உறுப்பினரான ஹம்சா அப்துல்லா, சியா சியூ யோங் மற்றும் சுலாய்மான் அப்துல் சாமாட் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
கடந்த மார்ச் 28-ஆம் தேதி சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர், ஸ்டீபன் வோங் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து சண்டாக்கானில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இரண்டு சட்டமன்றங்களைக் கொண்டுள்ள சண்டாக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 40,131 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 270 வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிக்க உள்ளனர்.
கடந்த 14-வது பொதுத் தேர்தலில், 10,098 பெரும்பான்மை வாக்குகளுடன் ஜசெக கட்சி வேட்பாளரான ஸ்டீபன் வோங் தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோ லிம் மிங் ஹூவை தோற்கடித்தார்.