சிங்கப்பூர் – நீண்ட காலமாக சிங்கை நாட்டில் சூதாட்ட மையங்களை அமைக்காமல் தற்காத்து வந்த அந்நாட்டு அரசாங்கம், ஒரு கட்டத்தில் இரண்டு சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது. ஏராளமான சிங்கப்பூரியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று சூதாட்ட மையங்களில் கோடிக்கணக்கான டாலர்களைச் செலவழித்து வந்ததை தடுக்கும் ஒரு யுக்தியாக இந்த நடவடிக்கை பார்க்கப்பட்டது.
வெளிநாட்டுப் பயணிகளை ஈர்ப்பது இன்னொரு கோணத்தில் சிங்கை வகுத்த வியூகமாகும்.
அதே வேளையில் சிங்கப்பூரியர்கள் அடிக்கடி சூதாட்ட மையங்களுக்கு செல்லக் கூடாது என்பதை உறுதி செய்ய, இந்த இரண்டு சூதாட்ட மையங்களுக்குமான நுழைவுக் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்தது சிங்கப்பூர் அரசு.
அப்படியிருந்தும், பணக்கார சிங்கப்பூரியர்கள் அதிக அளவில் சூதாட்ட மையங்களுக்குச் செல்வதைத் தடுக்க முடியவில்லை.
2010 முதல் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள், நிரந்தர வசிப்பிடத் தகுதி பெற்றவர்கள் இரண்டு சூதாட்ட மையங்களிலும் நுழைவதற்கு நுழைவுக் கட்டணமாக செலுத்திய தொகை மட்டும் 1.3 பில்லியன் சிங்கப்பூர் டாலர்களாகும். மலேசிய ரிங்கிட் மதிப்புக்கு இது சுமார் 3.965 பில்லியனாகும்.
ஆனால் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கு சூதாட்ட மையங்களுக்கான நுழைவுக் கட்டணம் இலவசமாகும்.
ஒரு நாளுக்கு 100 சிங்கப்பூர் டாலராகவும், ஓராண்டுக்கு 2000 டாலராகவும் இருந்த நுழைவுக் கட்டணம் கடந்த மாதத்தில் ஒரு நாளைக்கு 150 டாலராகவும் ஓர் ஆண்டுக்கு 3000 டாலராகவும் உயர்த்தப்பட்டது.
செந்தோசா தீவில் உள்ள ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் மற்றும் மரினா பே சாண்ட்ஸ் ஆகிய இரண்டு மட்டுமே சிங்கையில் இயங்கும் சூதாட்ட மையங்களாகும். ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் மலேசியாவின் கெந்திங் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.