Home வணிகம்/தொழில் நுட்பம் கூகுள் முடிவினால் மில்லியன் கணக்கான அண்ட்ரோயிட் கைத்தொலைபேசிகள் பாதிப்பு

கூகுள் முடிவினால் மில்லியன் கணக்கான அண்ட்ரோயிட் கைத்தொலைபேசிகள் பாதிப்பு

1275
0
SHARE
Ad

வாஷிங்டன் – அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் வணிகப் போரின் ஓர் அங்கமாக சீனாவின் ஹூவாவெய் கைத்தொலைபேசிகளில் அண்ட்ரோயிட் மென்பொருள் உள்ளீடு பயன்படுத்தப்படுவதை கூகுள் நிறுவனம் மீட்டுக் கொண்டதை அடுத்து, உலகம் எங்கும் மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்த முடிவின் காரணமாக, ஹூவாவெய் கைத்தொலைபேசிகளில் அண்ட்ரோய்ட் தொழில் நுட்பத்தில் இயங்கும் குறுஞ்செயலிகள் இனி செயல்படாது.

சீனா மீது அடுக்கடுக்கான வணிகப் போர் அதிரடிகளைத் தொடுத்து வரும் டொனால்ட் டிரம்ப் அரசாங்கம் தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டலாக இருக்கிறது என்று கூறி அண்மையில் ஹூவாவெய் நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலிட்டது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தனது இயங்குதள (operating system) மென்பொருளை ஹூவாவெய் கைத்தொலைபேசிகளிலிருந்து மீட்டுக் கொண்டது

இதன் காரணமாக நீங்கள் ஹூவாவெய் கைத்தொலைபேசி வைத்திருப்பவராக இருந்தால் இனி கூகுள் நிறுவனத்திற்கென சொந்தமான ஜி-மெயில் மின்னஞ்சல், கூகுள் மேப்ஸ் எனப்படும் பூகோள வரைபடம் காட்டும் குறுஞ்செயலி போன்றவற்றை இழக்கக் கூடும்.

இந்த முடிவுகளின் மூலம், கைத்தொலைபேசிகளைத் தயாரிப்பவர்களை விட அதன் உள்ளடக்க மென்பொருளைத் தயாரிப்பவரே அதிக வலிமை வாய்ந்தவர் என்பது வணிக வட்டாரங்களில் நிரூபணமாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஹூவாவெய் நிறுவனத்தின் கைத்தொலைபேசிகளுக்கு வன்பொருள் (hardware) எனப்படும் உபரிப் பாகங்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்களும் பின்வாங்கிக் கொண்டு அத்தகைய பொருட்களை ஹூவாவெய் நிறுவனத்திற்கு வழங்குவதை நிறுத்திக் கொண்டன.

ஹூவாவெய் நிறுவனம் உலகம் எங்கும் பயனர்களிடையே குறைந்த விலையில் அதிக வசதிகள் என்ற அடிப்படையில் மிகவும் பிரபலமாகி வந்தது. உலகிலேயே மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக ஹூவாவெய் உருவெடுக்கும் கட்டத்தில் இருந்தது என்றும் கூகுளின் தற்போதைய முடிவினால் அதன் எதிர்காலம் கேள்விக் குறியாகியிருக்கிறது என்றும் வணிக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2017-ஆம் ஆண்டில் 150 மில்லியன் கைத்தொலைபேசிகளை விற்பனை செய்த ஹூவாவெய் கடந்த ஆண்டு தனது விற்பனையை 203 மில்லியனாக அதிகரித்தது.

2019-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 59 மில்லியன் கைத்தொலைபேசிகளை ஹூவாவெய் விற்பனை செய்தது.