கோலாலம்பூர் – நீண்ட காலமாக மலேசியர்களின் பிரச்சனைகளுக்காகவும், இந்தியர் நலன்களுக்காகவும் போராடி வந்த எஸ்.ஜெயதாஸ் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் காலமானார்.
நீண்ட காலமாக தனது உடல் நலக் கோளாறுகளுடன் போராட்டம் நடத்திவந்த ஜெயதாசின் மரணச் செய்தியை அவரது நண்பர்களும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாஹ்மி இப்ராகிமும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
அன்வார் இப்ராகிம் கைதைத் தொடர்ந்து 1998-ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கிய சீர்திருத்தப் போராட்டங்களில் கலந்து கொண்டு மிகத் தீவிரமாகப் போராடிய ஜெயதாசின் பங்களிப்பும் தியாகங்களும் எப்போதும் நினைவு கூரப்படும் என பாஹ்மி நினைவு கூர்ந்தார்.
52 வயதான ஜெயதாஸ் சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
பிகேஆர் கட்சியில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டிருந்த ஜெயதாஸ் அந்தக் கட்சியில் பல பதவிகளை வகித்திருக்கிறார். பொதுத் தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டிருக்கிறார்.
ஹிண்ட்ராப் இயக்கத்திலும் தீவிர ஈடுபாடு காட்டிய ஜெயதாஸ் அந்த இயக்கத்தின் தகவல் பிரிவுத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.