கொழும்பு: தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிறப்பித்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதற்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு தங்கும் விடுதிகள் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
இதில் 258 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த ஏப்ரல் 21-ஆம் தேதிக்கு பின்னர் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் ஏற்பட்டன.
மசூதிகள், முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துகள் தாக்குதலுக்கு உள்ளாகின. இதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் அவசர நிலை தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இன்னும் ஒரு மாதத்திற்கு இது நீடிக்கும் என அதிபர் மைத்ரி பால சிறிசேனா தெரிவித்திருக்கிறார்.