தலைமைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக டத்தோஸ்ரீ வேள்பாரி சாமிவேலு அறிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு டத்தோ அசோஜனை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இன்று திங்கட்கிழமை நியமித்தார்.
ஜோகூர் மாநிலத்தில் முன்னாள் ஆசிரியராகப் பணியாற்றி ஒரு மஇகா கிளையில் இளைஞர் பகுதித் தலைவராகவும், பின்னர் தொகுதிக் காங்கிரசின் இளைஞர் பகுதித் தலைவராகவும் பதவி வகித்து மாநில இளைஞர் பகுதித் தலைவராகும் அளவுக்கு கட்சியில் படிப்படியாக உயர்ந்தவர் அசோஜன்.
அவரது துடிப்பான உழைப்பையும், சேவைகளையும் கண்ட அப்போதைய மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலு அசோஜனுக்கு 2004 பொதுத் தேர்தலில் காம்பீர் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிடும் வாய்ப்பை அளித்தார்.
அதுவும் அவருடன் காம்பீர் சட்டமன்றத்தில் அவருக்கு எதிராகப் போட்டியில் குதித்தது ஜோகூரின் முன்னாள் மாநில மந்திரிபெசாரும், முன்னாள் துணைப் பிரதமரும் பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் என்பது குறிப்பிடத்தக்கது.
2009-ஆம் ஆண்டில் மஇகா ஜோகூர் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்த அசோஜன் பின்னர் மாநிலத்தின் தொடர்புக் குழுத் தலைவராகவும், ஜோகூர் மாநில அரசாங்கத்தில் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார்.
தற்போது வேள்பாரி தலைமைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள, அந்தப் பதவிக்கு அசோஜனை நியமித்திருக்கிறார் விக்னேஸ்வரன்.
ஆட்சிப் பொறுப்பை இழந்தும், உருமாற்றத்தை எதிர்நோக்கியும் மஇகா தனது அரசியல் பயணத்தில் முக்கியமான காலகட்டத்தை அடைந்திருக்கும் இந்தத் தருணத்தில் கட்சியில் படிப்படியாக அடிமட்டத்திலிருந்து வளர்ந்து வந்த அசோஜன் கட்சியினரின் நாடித் துடிப்பைத் துல்லியமாக அறிந்தவர் என்ற வகையிலும், அனைவருடனும் இன்முகத்துடன் உரையாடி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவுபவர் என்ற வகையிலும் தலைமைச் செயலாளராக அவர் நியமனம் பெற்றிருப்பது பொருத்தமான ஒன்று என்ற வகையில் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.