Home நாடு மதங்களிடையே ஒற்றுமை வளரும் வண்ணம் கொண்டாடுவோம் – சேவியர் ஜெயகுமாரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

மதங்களிடையே ஒற்றுமை வளரும் வண்ணம் கொண்டாடுவோம் – சேவியர் ஜெயகுமாரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

1414
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் வெளியிட்ட நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தியில் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் இதயங்கனிந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லீம் பெருமக்களுக்கும் எனது இதயங்கனிந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமலான் மாதத்தை மிகவும் தூய்மையான புனிதமான மாதமாக முஸ்லீம் பெருமக்கள் கருதுகின்றனர். இம்மாதத்தில் அவர்கள் விரும்பி, உண்ணும் உணவுகளுக்கு மட்டும் நோன்பு இருப்பதில்லை மாறாக உணர்வுகளையும் சிந்தனைகளையும் கூடத் தூய்மையாக வைத்து, ஏழைகளுக்கு இரங்கிச் சதா இறைஞானத்துடன் இருந்து புனிதத்தைத் தேடுவதாக இஸ்லாமிய இதிகாசங்கள் கூறுகின்றன. ஆக மனிதர்களாகப் பட்ட நாம் மார்க்கத்தால் வேறு பட்டிருந்தாலும் எல்லா மதங்களின் போதனைகளும் நமக்குத் தவறாமல் உணர்த்துவது மனக் கட்டுப் பாட்டு, தூய்மை, தர்மம் என்ற புனிதங்களையே, என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். அதனால்தான்  நீண்ட நாட்களாக மலேசியர்கள் அனைவரும் அனைத்துச் சமயத் திருநாட்களையும் ஒற்றுமையாக உறவாடி ஒரு தேசியப் பண்டிகையாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்” என சேவியர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

நம் நாட்டில் நிலவும் இந்தத் தனித்தன்மையை நாம் தொடர்ந்து போற்றி வளர்ப்பதுடன் நமது எதிர்காலச் சந்ததியினருக்கும் போதித்துச் சமயங்களிடையே நிலவும் ஒற்றுமை மேலும் ஓங்கி வளரப் பாடு படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட சேவியர் ஜெயகுமார், எல்லா மக்களின் ஆசியும், அன்பும் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லீம் பெருமக்களுக்கும் கிட்ட இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என்றும் தெரிவித்தார்.