கோலாலம்பூர் – “பிரதமர் துன் மகாதீரின் முடிவை ஏற்போம். ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக லத்தீஃபா கோயாவை அவரது கடமைகளை ஆற்ற வாய்ப்பு கொடுப்போம்” என நம்பிக்கைக் கூட்டணியின் அனைத்துத் தரப்புகளுக்கும் பிகேஆர் கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் அறைகூவல் விடுத்துள்ளார்.
மகாதீரின் தீடீர் நியமனம் நம்பிக்கைக் கூட்டணி தரப்பிலிருந்தும், அரசு சார்பற்ற இயக்கங்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளதைச் சுட்டிக் காட்டிய அன்வார், இவையனைத்தும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் மீதான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றார்.
“எனினும் மகாதீரும், நம்பிக்கைக் கூட்டணி தலைமைத்துவமும் தொடர்ந்து எல்லா கருத்துகளையும் சீர்தூக்கிப் பார்த்து, அமைச்சரவைக்கும், நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்களின் மன்றத்திற்கும் உரிய விளக்கத்தை அளிப்பார்கள்” என தாம் நம்பிக்கைக் கொண்டிருப்பதாகும் அன்வார் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் கடப்பாடு மேலும் அதிகரிக்கும் நன்மையும் விளைந்துள்ளதாக அன்வார் குறிப்பிட்டார். நேற்று மலாக்காவில் மகாதீர் அரசு ஊழியர்களிடையே உரையாற்றும்போது அவர்கள் அரசியல் கட்சிகளோடு ஆழமான தொடர்புகளை வைத்திருக்கக் கூடாது என்றும் நடுநிலையோடு பணியாற்ற வேண்டும் என்றும் மகாதீர் விடுத்திருக்கும் வேண்டுகோளையும் அன்வார் சுட்டிக் காட்டினார்.
“முந்தைய அரசாங்கம், இன்றைய அரசாங்கம் என அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும். நம்பிக்கைக் கூட்டணி, அரசு சார்பற்ற இயக்கங்கள், பொதுமக்கள் என அனைவரும் அந்த ஆணையத்தின் வளர்ச்சியையும், செயலாற்றலையும் உன்னிப்பாகக் கவனித்து வருவர்” என்றும் அன்வார் கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து லத்தீஃபா கோயாவின் நியமனம் குறித்த சர்ச்சைகள் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நியமனத்தினால் மகாதீர்-அன்வார் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் செயல் ஆற்றலையும் பாதிக்கலாம் என்ற கருத்து நிலவியது.
ஜசெக தலைவர் லிம் கிட் சியாங்கும் லத்தீஃபாவின் நியமனம் சட்டப்படி சரியானது, ஆனால் அரசியல் ரீதியாக தவறானது எனக் கூறியிருந்தார்.
எனினும் அன்வாரின் இணக்கமான இந்த அறிவிப்பைத் தொடர்ந்து லத்தீஃபா மீதான சர்ச்சைகள் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.