கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக பரப்பப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளியானது முற்றிலும் உண்மையற்றது என பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
“இந்த உருவகங்கள் மற்றும் கொடூரமான குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன்” என இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த அவதூறு மற்றும் எனது ஒழுக்கத்தை களங்கடிக்க செய்யும் இந்த செயலானது எனது அரசியல் வாழ்க்கையை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது என நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.
இந்த தீய வேலையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் அம்பலப்படுத்துவதற்கு சட்டபூர்வமான சட்ட முறைகளை தாம் பயன்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.
“எனக்கு தீங்கிழைக்கும் வகையில் நடந்து கொண்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க என்னுடைய வழக்கறிஞர்களை வலியுறுத்தியுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அநாகரிகமற்ற அரசியல் போக்கினை தாம் முற்றிலுமாக கண்டிப்பதாகவும், தற்போதைய புதிய மலேசியாவின் கொள்கைக்கு இவை எதிரானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
“இத்தகைய கோழைத்தனமான செயல்கள் மற்றும் முயற்சிகளுக்கு நான் அடிப்பணியப் போவதில்லை. இந்த விவகாரம் குறித்து காவல் துறையும் ஊழல் தடுப்பு ஆணையமும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுப்பார்கள் என நான் நம்புகிறேன்” என அஸ்மின் கூறியுள்ளார்.
இதனிடையே, நேற்று செவ்வாய்க்கிழமை பிகேஆர் கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் போன்ற தோற்றத்தில் இருந்த ஆடவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருப்பது போன்ற காட்சிகள் நிறைந்த காணோளி சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து அது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து மூலத் தொழில் துணையமைச்சரான பிகேஆர் கட்சியின் ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின்னின் செயலாளர்களில் ஒருவரான முகமட் ஹசிக் அசிஸ் என்பவர் இன்று புதன்கிழமை (12 ஜூன்) அதிகாலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், அந்த அமைச்சருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருப்பது நான்தான் என பகிரங்கமாக அறிவித்திருந்தார்.