ஒர்லாண்டோ – அமெரிக்காவின் அடுத்த அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட, தனது பரப்புரையை டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாகத் தொடக்கியுள்ளார். நேற்று புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரில் டிரம்ப் தனது பரப்புரையைத் தொடக்கியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2020-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் குடியரசுக் கட்சியின் (ரிபப்ளிக்) சார்பிலான வேட்பாளராகப் போட்டியிடும் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு – 2024-ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக நீடிப்பார்.
அவருக்கு ஆதரவாக மீண்டும் துணையதிபராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் மைக் பென்ஸ் அடுத்த தவணைக்கும் அமெரிக்காவுக்கு டிரம்ப் தேவைப்படுகிறார் என அறிவித்தார்.
டிரம்பை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பில் மசாச்சுசெட்ஸ் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் பில் வெல்ட் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பொதுவாக, கடந்த கால நிலவரங்களை வைத்துப் பார்க்கும்போது நடப்பு அதிபரே மீண்டும் கட்சியின் சார்பில் போட்டியிடும் பாரம்பரியமே பின்பற்றப்படும் என்றும் கணிக்கப்படுகிறது.
இதற்கிடையில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் உட்பட 20 வேட்பாளர்கள் டிரம்பை எதிர்த்து அதிகாரபூர்வமாகப் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.