Home நாடு சாம்ரி வினோத் வருகையால் பாஸ் கட்சியிலும் சர்ச்சை

சாம்ரி வினோத் வருகையால் பாஸ் கட்சியிலும் சர்ச்சை

813
0
SHARE
Ad

குவாந்தான் – இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாஸ் கட்சியின் ஆண்டு மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற இளைஞர் பகுதி மாநாட்டில் மதபோதகர் முகமட் சாம்ரி வினோத் சிறப்பு வருகை தந்து உரையாற்றியது சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய ஜாகிர் நாயக்கின் மாணவரான பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்த சாம்ரி வினோத்தை அழைத்தது ஏன் என்றும் அவ்வாறு அழைப்பதற்கு முன்னர் தங்களின் கருத்துகளையும் கேட்டிருக்க வேண்டும் என்றும் பாஸ் தலைமைத்துவம் அவரை அழைத்ததற்கான முறையான காரணங்களைத் தெரிவிக்காவிட்டால் தான் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்யப் போவதாகவும் பெர்லிஸ் பேராளரான அமிருல் ஜூப்ரி மாட் சமான் மாநாட்டில் பேசியதாக மலேசியாகினியின் செய்தி தெரிவிக்கிறது.

“பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்த அவரைப் பற்றி எங்களுக்குத்தான் தெரியும். அவர் அழைக்கப்பட்டது ஏன் என்பது பற்றி பாஸ் இளைஞர் பிரிவின் தலைமைத்துவம் முறையாகத் தெரிவிக்காவிட்டால் பெர்லிஸ் பேராளர்கள் நாங்கள் அனைவரும் இந்த மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்வோம். அவரை அழைப்பதற்கு முன்னர் எங்களின் கருத்துகளையும் கேட்டிருக்க வேண்டும்” எனவும் அமிருல் ஜூப்ரி கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பெர்லிஸ் பாஸ் கட்சியின் அமால் பிரிவு இயக்குநரான அமிருல் ஜூப்ரி, பெர்லிஸ் முப்டியின் கார் கடந்த மார்ச் 22-ஆம் தேதி எரிக்கப்பட்டது தொடர்பில் இந்தக் கேள்வியை எழுப்பினார் எனக் கருதப்படுகிறது. “பெர்லிஸ் முப்டியின் கார் எரிக்கப்பட்டது தொடர்பில் நாங்கள் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். அப்போது சாம்ரி வினோத் என்ன செய்தார் என்பது எங்களுக்குத்தான் தெரியும்” என்றும் அமிருல் ஜூப்ரி தனது உரையில் தெரிவித்திருக்கிறார்.

நேற்று புதன்கிழமை பாஸ் இளைஞர் பகுதி மாநாட்டில் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்ட சாம்ரி வினோத் உரையாற்றும்போது ‘இந்தியாவால் தேடப்படும் ஜாகிர் நாயக் மலேசிய அரசாங்கத்தால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், தான் தனது மலேசியக் குடியுரிமையை இரத்து செய்ய திரும்பவும் மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்க விரும்புவதாக’ கூறியிருந்தார்.