குவாந்தான் – இந்தியாவால் தேடப்படும் ஜாகிர் நாயக் மலேசிய அரசாங்கத்தால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், தான் தனது மலேசியக் குடியுரிமையை இரத்து செய்ய திரும்பவும் மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்க விரும்புவதாக மதபோதகர் முகமட் சாம்ரி வினோத் கூறுகிறார்.
குவாந்தானில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாஸ் கட்சியின் 60-ஆம் ஆண்டு இளைஞர் பிரிவு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே சாம்ரி வினோத் இவ்வாறு கூறினார்.
“மலேசியாவிலும், நாடாளுமன்றத்திலும் இஸ்லாம் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது எனக்கு கவலையளிக்கிறது. அரசாங்கம் ஜாகிர் நாயக்கைத் திருப்பியனுப்பினால் நான் எனது அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க விரும்புகிறேன். அதன் பின்னர் நான் மலேசியாவில் தொடர்ந்து வசிக்க விரும்பவில்லை” என ஜாகிர் நாயக்கின் மாணவனுமான சாம்ரி வினோத் தனது உரையில் குறிப்பிட்டார்.
இஸ்லாம் மதத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும்போது பாஸ் தலைவர்கள் தங்களின் அரசியல் மற்றும் கொள்கை வேறுபாடுகளை மறந்து ஒரே நோக்கத்திற்காக ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் பாஸ் கட்சியினரைக் கேட்டுக் கொண்டார்.
“இந்த விவகாரத்தில் சீன சமூகத்தை நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். சீன சமூகத்தினர் அரசியல் ரீதியாக ஜசெக, மசீச எனப் பிரிந்து கிடந்தாலும், தங்களின் இனத்திற்கு எதிரான பிரச்சனைகள் எழும்போது அவர்கள் ஒன்றிணைந்து கொள்கிறார்கள். மதத்தின் பெயரால் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் காரணம் நம் அனைவரின் போராட்டமும் ஒன்றுதான்” என்றும் சாம்ரி வினோத் கூறியிருக்கிறார்.