Home கலை உலகம் பிக் பாஸ் 3 – மலேசியக் கலைஞர் முகேன் ராவ் பங்கேற்கிறாரா?

பிக் பாஸ் 3 – மலேசியக் கலைஞர் முகேன் ராவ் பங்கேற்கிறாரா?

1415
0
SHARE
Ad

சென்னை – உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி எதிர்வரும் ஜூன் 23-ஆம் தேதி ஸ்டார் விஜய் அலைவரிசையில் ஒளியேறவிருக்கும் பிக் பாஸ் -3. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த முறையும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் 15 பிரபலங்கள் யார் என பல்வேறு ஆரூடங்களும் அடிக்கடி ஊடகங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்த முறை மலேசியாவில் இருந்து ஒரு கலைஞர் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவிருக்கிறார் என்ற செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரவி வருகின்றது.

மலேசியாவைச் சேர்ந்த முகேன் ராவ்தான் அந்தக் கலைஞர் என சில தரப்புகள் தெரிவித்திருக்கின்றன.

அண்மையக் காலத்தில் முகேன் ராவ் மலேசிய மேடைகளில், பாடகராக, நிகழ்ச்சி படைப்பாளராக புகழ் பெற்று வருகிறார் என்றும், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் அவரை ஏராளமானோர் – குறிப்பாக பெண்கள் – பின்தொடர்கிறார்கள் என்றும் மலேசியக் கலையுலக நிலவரங்களை அறிந்த சிலர் தெரிவிக்கின்றனர்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 181,000 பேர் பின்தொடர்கிறார்கள். அவருக்கென இருக்கும் இரசிகர்களின் அதிகாரத்துவ இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் 114,000 பேர் பின்தொடர்கிறார்கள்.

யூடியூப் வழி காணொளியாக தனது இசைப் பாடல்களை (மியூசிக் வீடியோ) முகேன் ராவ் உலவ விட்டு, அதன் மூலமும் அவர் மலேசியர்களிடையே குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடையே புகழ் பெற்றிருக்கிறார்.

அவரது சில யூடியூப் இசைப்பாடல்கள் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

முகேன் ராவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியானால், கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெறும் முதல் மலேசியர் என்ற பெருமையைப் பெறுவார்.