புத்ரா ஜெயா – தாய்லாந்துக்கு வருகை மேற்கொண்டு பிரதமர் துன் மகாதீர் புறப்படுவதற்கு முன்னர் நேற்று வியாழக்கிழமை குறுகிய நேரம் அவரைச் சந்தித்து நடப்பு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது துணைப் பிரதமர் விவகாரமும் அஸ்மின் அலி தொடர்பான காணொளி குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்த அன்வார், தற்போது நாட்டின் பொருளாதார மேம்பாடு குறித்து செயல்படுவதே சரியானது என்றும், துணைப் பிரதமர் மாற்றமோ, அமைச்சரவை மாற்றவோ தேவையில்லாத ஒன்று என பிரதமர் கருத்துடன் தான் ஒத்துப் போவதாகவும் குறிப்பிட்டார்.
அடுத்த பிரதமராக வேண்டுமென்றால் முதலில் வான் அசிசா தனது பதவியிலிருந்து விலகி அவருக்குப் பதிலாக அன்வார் துணைப் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு, அன்வார் பிரதமராகும்வரை தான் தனது துணைப் பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என வான் அசிசா அறிவித்திருந்தார்.
அஸ்மின் அலி குறித்த காணொளி குறித்தும் தாங்கள் விவாதித்ததாகவும் இதுபோன்ற சாக்கடை அரசியலை பிகேஆர் கட்சி எப்போதும் நிராகரிக்கும் என பிரதமரிடம் தான் கூறியதாகவும், அஸ்மின் அலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் அன்வார் தனது பதிவில் மேலும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அரசியல் கலந்திருப்பதாகவும் சரியான ஆதாரம் இன்றி இந்த விவகாரத்தைப் பரப்புவது குறித்து யார் மீதும் குற்றம் சாட்டுவதும் நியாயமல்ல என்றும் தனது கருத்தைத் தெரிவித்ததாகவும் அன்வார் கூறியுள்ளார்.