இலண்டன் – பதவி விலகவிருக்கும் தெரசா மே-க்கு பதிலாக அடுத்த பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்கும் வாய்ப்புள்ளவர் என எதிர்பார்க்கப்படும் போரிஸ் ஜோன்சன் தனது காதலியால் அந்த வாய்ப்பை இழக்கும் நிலைமை ஏற்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் கணித்துள்ளன.
சூடு பிடித்திருக்கும் பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜோன்சன் முன்னணி வகிக்கிறார். இவர் இலண்டன் மாநகரத்தின் தலைவராக (மேயராக) பதவி வகித்து மக்களின் ஆதரவைப் பெற்றவர்.
இவருக்குப் போட்டியாளராக விளங்குபவர் ஜெரமி ஹண்ட். இவரும் பிரதமர் பதவிக்கு குறி வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை போரிஸ் ஜோன்சனின் காதலி கேரி சைமண்ட்ஸ் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்த வாக்குவாதத்தின் பின்னணி என்ன என்பதை போரிஸ் ஜோன்சன் விளக்க வேண்டும் என அவர் மீது அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்த வாக்குவாதம் குறித்து அவர் விளக்க வேண்டும் என ஜெரமி ஹண்ட் தரப்பு ஆதரவாளர்கள் தொடர்ந்து நெருக்குதல்கள் தந்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பை போரிஸ் ஜோன்சன் இழக்கலாம் என சில பிரிட்டன் ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.