ஜோகூர் பாரு: பாசிர் கூடாங் பகுதியில் உள்ள காற்றில் நச்சு இரசாயனங்கள் எதுவும் கலக்கப்படாத போதிலும், அப்பகுதியில் உள்ள மாணவர்கள் வாந்தி மற்றும் தலைச்சுற்றல் அறிகுறிகளை அனுபவிக்க என்ன காரணம் என்று அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளதாக மாநில சுகாதார, கலாச்சாரம், மற்றும் பாரம்பரியக் குழுத் தலைவர் முகமட் குசான் அபு பாகார் கூறினார்.
இரசாயனக் கருவிகள் மூலம் சோதனைகள் நடத்தியப் பின்பும் அப்பகுதிகளில் எவ்வித நச்சு வாயுக்களும் காற்றில் கலக்காததை அவர் சுட்டிக் காட்டினார்.
பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட 85 ஆய்வுக் குழுக்களின் தகவலின்படி எவ்விதமான நச்சு இரசாயனங்கள் எதுவும் அப்பகுதியில் இல்லை என்பதை அவர் கூறினார்.
“சில பள்ளிகளில், நச்சு கலந்ததற்கான அறிகுறிகளே இல்லை என்றும், ஆனால் மாணவர்களின் இன்னும் வாந்தி மற்றும் தலைச்சுற்றுக்கு ஆளாகி வருகிறார்கள்” என்று அவர் இன்று செவ்வாயன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நேற்று திங்களன்று, 31 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 310 மாணவர்களும், மூன்று ஆசிரியர்களும் வாந்தி மற்றும் தலைச்சுற்று அறிகுறிகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் ஓய்வெடுக்கும்படி கேட்கப்பட்ட பின்னர், 127 பேர் அருகிலுள்ள மருந்தகங்களுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் மூன்று பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர் என்று அவர் கூறினார்.
இன்று ஏழு பள்ளிகளில் இருந்து 11 புகார்கள் காலை 11 மணிவரையிலும் வந்திருப்பதாக குசான் கூறினார்.
கடந்த ஜூன் 20-ஆம் தேதியன்று பாசீர் கூடாங்கில் சமீபத்திய இரசாயன மாசுபாடு காரணமாக 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாந்தி மற்றம் தலைச்சுற்றல் அறிகுறிகளுக்கு ஆளாகினர்.