Home நாடு 12-ஆவது மலேசியத் திட்டம்: இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்: வேதமூர்த்தி

12-ஆவது மலேசியத் திட்டம்: இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்: வேதமூர்த்தி

1264
0
SHARE
Ad

புத்ராஜெயா: ஐநா மன்றத்தின் ‘நீடித்த வளர்ச்சி’ என்னும் இலக்கிற்கு வலுசேர்க்கும் விதமாக பொருளாதார வலுவூட்டல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக மறுஉருவாக்கம் ஆகிய குறிக்கோள்களை உள்ளடக்கி வரையப்படும் 12-ஆவது மலேசியத் திட்டம், இந்தியர்களுக்கும் மற்ற இனங்களுக்கு இணையான வளப்பத்தையும் சமூக-பொருளாதார மீட்சியையும் கொண்டுவரும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின்போது, நாட்டின் வளமையிலும் செழிப்பிலும் அனைத்து மலேசியர்களும் பங்கு கொள்வதற்கான திட்டத்தை மலேசிய அரசு மேற்கொண்டு வருகிறது.

“2020 மூன்றாம் காலாண்டு அளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சாத்தியம் உள்ள 12-ஆவது மலேசியத் திட்டத்தின்வழி இந்தியர்கள் சமூக-பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்குரிய திட்டங்களையும் வியூகங்களையும் வகுப்பதற்காகவும் இதன் தொடர்பில் தகுந்த ஆலோசனை வழங்கவும் பொருளாதார ஆலோசனை மற்றும் வளர்ச்சிக் குழுமம் என்னும் பெயரில் ஒரு பணிக் குழுவை அமைக்க உள்ளேன். இதில் பங்கு கொள்ள ஆர்வம் உள்ள பொருளாதார வல்லுநர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் என்னை அணுகலாம்” என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இதன் தொடர்பில் நான் ஏற்கெனவே பல்துறைசார் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதுடன் இந்திய சமுதாய வளர்ச்சி மற்றும் பொருளாதார மீட்சி குறித்த திட்டங்களையும் வியூகங்களையும் சேகரித்து வருகிறேன். 2021-2025 காலக் கட்டத்தை உள்ளடக்கிய 12-ஆவது மலேசியத் திட்டம், மலேசிய இந்தியர்களின் அபிலாஷைகளையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யக் கூடிய அம்சங்களைக் கொண்டிருக்கும்; அதேவேளை, நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தலின்போது நம்பிக்கைக் கூட்டணி இந்திய சமுதாயத்திற்கு அளித்த வாக்குறுதிகளின் சாரமும் கூறும் இடம்பெற்றிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் வலுவாக பிரதிபலிக்கின்றன” என்றும் வேதமூர்த்தி மேலும் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

“இதற்கிடையில், ‘நாட்டின் வளப்பம் அனைவருக்கும்’ என்னும் கருத்தை நிலைநாட்டுவதன் தொடர்பிலும் தேசத்தின் பன்முகத்தன்மை மிளிர்வது குறித்தும் அமைச்சகங்கள், மாநில நிருவாகக் கட்டமைப்புகள், அரசு சாரா அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் உட்பட பழுத்த அனுபவம் மிக்கவர்களின் கருத்துகளையும் திரட்டி வருகிறேன். பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின் மூலம் மலேசிய இந்தியர்கள், குறிப்பாக, ‘பி-40’ தரப்பினர் மேம்பாடு காண்பதன் தொடர்பில் நம்பிக்கை கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள இந்திய அமைச்சர்கள், துணை அமைச்சர், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் பொருத்தமான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் முன் வைக்கலாம்” என்றும் இதன் தொடர்பான அறிக்கையில் வேதமூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.