கூச்சிங்: 2007-ஆம் ஆண்டுக்கான இளைஞர் சங்கங்கள் மற்றும் இளைஞர் மேம்பாட்டுச் சட்டத் திருத்தத்தின் மூலம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் 30 வயதிற்கு உட்பட்டவர் என்ற வகையில் ‘இளைஞர்கள்‘ என்ற வார்த்தையை மறுவரையறை செய்வதற்கான மசோதாவை முன்வைத்திருந்தார்.
அந்த மசோதா கடந்த ஜூலை 3-ஆம் தேதி மக்களைவயில் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, இது குறித்து கருத்துரைத்த சரவாக் மாநில முதல்வர் அபாங் ஜொஹாரி ஓபெங், சரவாக்கில் இளைஞர்களாகக் கொள்ளப்படுபவர்களின் வயது வரம்பு இன்னும் 40-ஆக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மத்திய அரசு அவ்வயது கட்டுப்பாட்டை 30-ஆக குறைத்திருந்தாலும், சரவாக் மாநில சட்டசபையின் அனுமதி இருந்தால் மட்டுமே சரவாக்கிலும் அந்த வயது வரம்பை நிறைவேற்ற முடியும் என்று அவர் கூறினார்.
30 வயதிற்கு உட்பட்டவர்களே ‘இளைஞர்கள்‘ என்ற வரையறை மலேசிய இளைஞர் கொள்கையிலும் அனைத்துலக தரத்திற்கு ஏற்பவும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திருத்தத்தின் வாயிலாக இளைஞர்களுக்கு பதவி வகிக்க அதிக வாய்ப்புகளைத் திறப்பதும், மேலும் இளைய தலைவர்களை மெருகூட்ட வழி வகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயினும், அனைத்துலக நாடுகள் தேர்தல்களில் வாக்களிக்கும் வயதினை 18 வயதாக நிலை நிறுத்தியுள்ள நிலையில், நமது நாடும் அதனை பின்பற்றுவதில் எவ்வித தவறுமில்லை என்று அபாங் ஜொஹாரி குறிப்பிட்டார்.