ஜோகூர் பாரு: காற்றுமாசுபாடு காரணமாக பாசிர் கூடாங் பகுதியில் ஒரு பெண் இறந்ததாக கூறப்படும் வதந்திகளை சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் மறுத்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் சம்பந்தப்பட்ட பெண்மணியின் புகைப்படங்கள் பரவலாக பகிரப்பட்டு வந்தன. இது குறித்து அப்பெண்மணியின் கணவர், தங்களை தனிமையில் இருக்க மக்களை வேண்டிக் கேட்டதுடன், தவறான கூற்றுகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
38 வயதான அப்பெண் மூச்சுத் திணறல் காரணமாக இறந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாகப் பகிரப்பட்டன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அந்த பெண்ணுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நாட்பட்ட நோய்கள் இருந்ததாக சுல்கிப்ளி கூறினார்.
“அப்பெண்மணியின் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.” என்று ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சுங்கை கிம் கிம் மாசுபாட்டின் போது அல்லது ஜூன் 20-ஆம் தேதி முதல், அந்த பெண்மணி சிகிச்சை பெற்றதாக எந்தவொரு பதிவுகளும் மருத்துவமனை அறிக்கையில் இல்லை என்று சுல்கிப்ளி மேலும் கூறினார்.
அப்பெண்ணின் குடும்ப உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும், பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் அனைத்து தரப்பினர்களையும் கேட்டுக் கொண்டார்.
பாசிர் கூடாங்கைத் தாக்கிய காற்று தூய்மைக்கேட்டுக்கான காரணங்களை இதுவரையிலும் அரசாங்கம் அடையாளம் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.