Home நாடு கவிஞர் வீரமான்: ஒரு சந்திப்பு

கவிஞர் வீரமான்: ஒரு சந்திப்பு

2351
0
SHARE
Ad

(மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தவிர்க்க முடியாத ஓர் ஆளுமையாக உலா வந்தவர் கவிஞர் வீரமான். கவிதை, சிறுகதை, கட்டுரை, கவியரங்கம், மேடைப் பேச்சு என பலதரப்பட்ட இலக்கியத் தளங்களில் பயணம் செய்தவர். தற்போது உடல் நலம் குன்றி இருக்கும் அவரைச் சந்தித்தனர் ம.நவீன் தலைமையிலான வல்லினம் குழுவினர். வல்லினம் இணையத் தளத்தில் வெளிவந்த அந்தச் சந்திப்பு குறித்த இந்தக் கட்டுரையை செல்லியல் வாசகர்களுக்காக வழங்குகிறோம்)

“கவிஞர் வீரமான் காலில் அடிப்பட்டு முதுமையாலும் உடல்நலக் குறைவாலும் கிள்ளானில் உள்ள சமூகநல இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் என யாரும் இல்லாமல் தனிமையில் அவர் இருப்பதால் வாய்ப்புள்ள வாசகர்கள் அவரைக் காணச் செல்லலாம். நேற்று அவரைக் காணச் சென்றேன்” என கவிஞர் வீரமான் கட்டிலில் அமர்ந்துள்ள படமொன்றுடன் புலனக்குழுவில் செய்தி பகிரப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

அது பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு தகவல் (forward message) எனக் கண்டதும் புரிந்தது. யார் அதன் மூலகர்த்தா எனத் தெரியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் அந்தச் செய்தி வெவ்வேறு குழுக்களில் வெவ்வேறு நபர்களால் பகிரப்பட்டது. எல்லாவற்றிலும்நேற்று அவரைக் காணச் சென்றேன்என்ற தகவல் தவறாமல் இடம்பெற்றிருந்தது. அவசரமாகப் பகிர்வதில் எது பற்றியும் யாருக்கு என்ன கவலை?

எஸ்.பி.எம், எஸ்.தி.பி.எம் இலக்கியங்களில் வீரமானின் மரபுக்கவிதைகள் இடம்பெற்றுள்ளன. என்னிடம்வீரமான் கவிதைகள்என்ற தொகுப்பு உண்டு. நான் இன்று மரபுக்கவிதை வாசகனல்லாவிட்டாலும் தொடக்க காலத்தில் அவைதான் அதிகம் வாசிக்கக் கிடைத்தன. அதனாலேயே நான் 2002இல் எழுதிய புதுக்கவிதைகளில் சந்தம் செறிவாகக் கூடிவந்தது. வீரமான் என்ற பெயர் எனக்கு அப்போதே அறிமுகம். அழகிய கண்கள் கொண்ட புள்ளிமான் ஒன்று அஞ்சி ஓடாமல் முன் வந்து நிற்கும் காட்சியை உருவாக்கும் பெயர்.

கவிஞர் வீரமானின் இயற்பெயர் வீ.மாரியப்பன்பினாங்கு தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். 1956இல் மலேசியா வந்தவர். 1959 தொடங்கி மலேசியத் தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டார். பெரும்பாலும் கவிதைகளையே எழுதி வந்தவர். சென்று காண வேண்டும் என்ற எண்ணம் மனதில் அப்போதே எழுந்தது. இரண்டு நாட்களுக்கு முன் டாக்டர் சண்முகசிவாபோகலாமா?” எனக்கேட்டபோது இன்றைய நாளை அதற்காகவே ஒதுக்கிக்கொண்டேன். இறுதி நேரத்தில் டாக்டரால் வர முடியாததால் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்க நண்பர்களுடன் செல்வதாகத் திட்டம் மாறியது.

Destiny Klang எனும் பெயரில் அமைந்துள்ளது இந்தச் சமூக நல இல்லம். காரை விட்டு இறங்கியபோது ஒரு சீன முதியவர் வரவேற்றார். விசாலமான வீடு. உள்ளே நுழைந்ததும் முதுமையின் மணம். மன்னன் மாத இதழில் இணைந்திருந்த காலத்தில் பல முதியோர் இல்லங்களுக்குச் சென்று கைவிடப்பட்ட முதியவர்களை நேர்காணல் செய்துள்ளேன். அப்போதிருந்தே இந்த மணம் பழக்கம். அது பெம்பர்ஸில் ஊறிய சிறுநீரின் வாடை மட்டுமல்ல. போர்வையிலும் தலையணையிலும் ஊறிவிட்ட கண்ணீரும் கலந்ததால் உருவாகும் மணம்.

நுழைந்தவுடன் வலதுபுறக் கட்டிலில் வீரமான் இருந்தார். என் பெயரை மட்டும் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டேன். உடன் வந்த தென்னரசுவை அவருக்கு அடையாளம் தெரிந்தது. கடந்த ஆண்டு அவர்கள் இயக்கம் மூலம் கொண்டாடும் தமிழ் விழாவில் கவிஞர் வீரமானுக்குச் சிறப்பு செய்திருந்தனர்.

கொஞ்ச நாளா மனசு ஒரு மாதிரி இருந்திச்சி. ஏதோ நடக்கப்போறதா தோணிட்டே இருந்திச்சி. நண்பர்கள்கிட்ட வீட்டில தனியா இருக்க பயமா இருக்கு. ஏதாவது ஹோம் இருந்தா பார்க்கச் சொன்னேன். பார்ப்பதா சொன்னாங்க. அதுக்குள்ள மயங்கி விழுந்து கணுக்காலில எலும்பு பிறண்டிருச்சி.” என்றார். காலில் பெரிய கட்டு. கனக்கும் எனப் பார்த்ததும் தெரிந்தது. எப்படி சுயமாக அசைப்பார் எனத் தெரியவில்லை.

ரொம்ப நாளா நடக்காததால காலுல பலம் இல்லை. எழுந்து ஒக்காரவே சிரமப்படனும். இப்ப மருந்து சாப்பிடத்தான் எழுந்தேன்என்றார். அவருக்கு இமைகள் சிறியவை என்பதால் விழிப்படலம்  முகத்தில் பெரிதாகத் தெரிந்தது. அதனாலேயே அவர் எப்போதும் முறைப்பதுபோல இருக்கும். அவர் நூல்களிலும் அவ்வாறு முறைக்கும் படங்களையே பார்த்துள்ளேன். நேரில் சந்திப்பது இதுவே முதன்முறை. குரலில் கனிவு தவழ்ந்தது.

எனக்கு இப்ப வரைக்கு நீல ஐ.சி இல்ல. சிவப்பு ஐ.சிதான். ஆட்சி மாறுன பிறகு கிடைக்குமுன்னு சொன்னதால புத்ரா ஜெயா போயி விசாரிச்சேன். நான் தமிழகத்துல பொறந்தவன். உடனே கிடைக்குமா? இரண்டு வருடம் காத்திருக்க சொல்லியிருக்காங்க. காத்திருக்கனும்மென்மையாகச் சிரித்தார். 77 வயதில் குரலில் நடுக்கம் இல்லை.

ஒரு காலத்துல என் குரல சிவாஜி கணேசன் குரலுன்னு சொல்வாங்க. தோ புவான் உமா சம்பந்தன் இருக்காங்கல்ல. அவங்ககூட அப்படித்தான் சொல்வாங்க.” அவர் கண்கள் கலங்கவும் பேச்சை வேறு பக்கம் திசை திருப்பினோம்.

கவிஞர் வீரமானுடன், கட்டுரையாளர் ம.நவீன்

மனைவி இறந்தபிறகு நான் தமிழகம் போறதில்ல. பிள்ளைங்க இருக்காங்க தமிழகத்துல. நான் அங்க போயி என்ன செய்ய? இதோ இப்படி நீங்களெல்லாம் வறீங்க. என்னோட ஏதோ ஒரு கவித வரி உங்களுக்கு ஞாபகம் இருக்கும். உங்களோட பேசுறதுதானே எனக்கு சந்தோசம்.” பேசிக்கொண்டே ஒரு மருந்து பாக்கெட்டைக் கிழிக்க முயன்றார். நான் உதவுவதாகக் கூறினேன். “இல்ல உங்களுக்கு அதை கிழிப்பதில் சிரமம் இருக்கும்என்றவர் தானே கிழித்து குவளையில் கொட்டி பருகினார். நான் சிரித்துக்கொண்டேன்.

தன் நினைவில் உள்ள நபர்களைப் பற்றிக்கூறினார். ஆறு.நாகப்பன் பற்றிய நினைவு அவருக்கு வந்ததும் அவரது சைவ சித்தாந்த மாணவர் ஒருவர் கொடுத்த நூலை நினைவுபடுத்தினார். “இப்பவெல்லாம் படிக்கிறது எதுவும் ஞாபகத்தில் நிக்குறதில்ல. மனசுல பதியறதில்ல. எழுத நினைச்சாலும் மனசு குவியறதுல்ல. அன்றைக்குக்கூட சைவ சித்தாந்த புத்தகம் ஒன்னு கிடைச்சது. எனக்குமுன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளேஎன்ற அடி ஞாபகத்துக்கு வந்துச்சி. ஆனா அடுத்த அடியில ஒரு வார்த்த மறந்துடுச்சி. இரண்டு நாளா யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.” என்றார்.

நான் கொண்டு சென்ற சில நூல்களைக் கொடுத்தேன். அதில் சண்முகசிவா சிறுகதை தொகுப்பைச் சுட்டிக்காட்டிஉங்களுக்குப் பிடிக்கும். வாசிங்க என்றேன்.” வணங்கி வாங்கிக்கொண்டார். பொருளாதாரச் சிக்கல்களைக் கேட்டேன்.

பல பத்திரிகைகளில பல வேலை செஞ்சாச்சி. இன்றைக்கு வருமானமுன்னு ஒன்னும் இல்ல. நண்பர்கள் சிலர் உதவி செய்யுறாங்க. வீரமான்ற பேரு பலரோட ஞாபகத்துல இருக்கு. தமிழ் என்னைய சோர்ந்து போகாம காப்பாத்துது.” கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டு நூல்களின் பெயரை வாசித்தார்.

முன்ன பினாங்குல அசான்கனி, கரு.திருவரசு, மு.சேது, முகமது யூசுப் எல்லாம் சேர்ந்து நால்வர்னு ஒரு மரபுக்கவிஞர் குழு வச்சிருந்தாங்க. அதைப்பார்த்து நான், காரைக்கிழார், மை.தீ.சுல்தான் மூனு பேரும் சேர்ந்துதிரிகூடர்னு ஒரு இலக்கிய குழுவ உருவாக்கினோம். அப்புறம் எல்லா மரபுக் கவிஞர்களும் ஒன்று சேர்ந்து கவிதை பற்றிப் பேசனுமுன்னு கவிதைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. அதுல பாதாசன், தீப்பொறியெல்லாம் இருந்தாங்க. அதெல்லாம் உற்சாகமான காலம்,” என்றவர்உங்களுக்கு குடிக்கக் கொடுக்கக்கூட எங்கிட்ட ஒண்ணுமே இல்ல. நீங்க சாப்பிட்டீங்களா?” என்றார்.

வருந்துவார் எனசாப்பிட்டு விட்டோம்என்றேன். “பொய்எனக்கூறி சிரித்தார். “தன்நெஞ்சறிவது பொய்யற்கஎன்றவர்பொய் சொன்னதால் வருந்தி உங்க முகமே அதை காட்டிடுதுஎன்றார். தென்னரசுஏண்ணே கவிஞர்கிட்ட பொய் சொல்றீங்க; கண்டுப்பிடிச்சிட்டாருல்லஎனக்கூறிச் சிரித்தார். “பொய்தான்என ஒப்புக்கொண்டேன்.

அவர் நினைவுகள் அறுந்தறுந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று மீண்டன. புறப்படும் முன் வல்லினம் சார்பாக சிறு தொகை ஒன்றை வழங்கினோம். மறுத்தார். வற்புறுத்திக் கொடுத்தோம். “எதுவுமே இல்லாட்டினாலும் இந்த மொழி இருக்கு பார்த்தீங்களா? உங்களோடயெல்லாம் பேசும்போது அது உள்ளேருந்து மீண்டு வருதுல்ல. அதுதான் சந்தோசம்,” என்றார். அவர் கண்கள் கலங்கியிருந்தனபுறப்பட்டோம்.

நான் எப்போதுமே என் நண்பர்களிடம் சொல்வதுண்டு. விற்பனையின் எண்ணிக்கையையும் வெளியீட்டின் லாபத்தையும் மையமாக வைத்து செயல்படும் ஒத்த சிந்தனையை உடைய நவீன இலக்கியவாதியைவிட கருத்தியல் ரீதியாக முற்றும் முழுதாக முரண்பட்ட பல மரபான எழுத்தாளர்கள் எனக்கு முக்கியமானவர்கள். இந்த தேசத்தில், இந்த மொழியில் இயங்கினால் தனிமையும் வெறுமையும் வறுமையும் இறுதியில் நிலைக்கும் எனத்தெரிந்தே அதில் இயங்கத் துடித்தவர்கள் அவர்கள்தாங்கள் நம்பிய இலக்கிய வடிவத்துக்கு நேர்மையாக இருந்தவர்கள். அவர்களை வணங்குவதும் நினைவுபடுத்துவதும் இன்றைய படைப்பாளிக்கு முக்கியமானது.

இன்று நினைத்தாலும் கவிஞர் வீரமான் தமிழகம் புறப்பட்டுவிடலாம். அங்கு அவரது பிள்ளைகள் உள்ளனர். சொந்த வீடு உண்டு. பொருளியல் சிக்கல் இல்லாமல் எஞ்சிய காலத்தை ஓட்டலாம். ஆனால் அந்த வாழ்க்கை அவருக்கு நிம்மதியைக் கொடுக்காது. முதுமைத் தனிமையில் ஒரு கவிஞன் விரும்புவது தன் தேகத்தில் போர்த்தியுள்ள வயோதிகத்தை அறிந்த கருணை கொண்ட பார்வையை அல்ல. தனக்கு மட்டுமே அந்தரங்கமாகத் தெரிந்த கவிதையுலகின் வாசகனை. அதுவே அவனை உயிர்ப்பிக்கிறது. அந்த ஒரு சில கண்களுக்காகத்தான் தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறான்.

காரில் ஏறியபோது தென்னரசு, “மனம் கனமா இருக்கு. இதுல யார குறை சொல்வதுஎன்றார். நான் தமிழ்ச் சூழலில் தீவிரமாக இயங்கும் ஒரு கலைஞன் இந்த அவலங்களைச் சந்தித்தே ஆக வேண்டும் என்று கேரள இலக்கியச் சூழலை ஒப்பிட்டுக் கூறினேன். இவ்வளவு மழுங்கிய சூழலில் இயங்குவது அந்தக் கலைஞனே ஏற்றுக்கொண்ட தேர்வு. ஒருவகையில் அது அவனது பொறுப்பு. எந்த இழிநிலையும் அவன் அதிலிருந்து பின்வாங்கக்கூடாது என்றேன்.

நண்பர்களை இறக்கிவிட்டு புறப்பட்ட போது சுவாமி பிரம்மானந்தாவுக்கு அழைத்தேன்.

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனேஎன்ற பாடலில்பேர்த்துஎன்ற வார்த்தையின் பொருள் கேட்டேன். ‘மறுபடியும்எனப் பொருள் கொள்ளலாம் என்றார். கொஞ்ச நேரம் அப்பாடலின் கவித்துவம் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

முதல் வரி சாதாரணமாகத்தான் உள்ளது. இரண்டாவது வரியில்பிற்பட்டனவாகிய புதிய பொருள்களுக்கும் புதிய பொருளாகியவன்எனும் வரி ஏற்படுத்தும் ஆச்சரியத்தைக் கூறினேன். சுவாமி மாணிக்கவாசகரிடம் எப்போதுமே வெளிப்படும் கவித்துவம் பற்றிக் கூறினார். தானும்  திருவாசகத்தின் சில பாடல்களைத்தான் சற்றுமுன் படித்துக் கொண்டிருந்ததாகக் கூறவும் ஆச்சரியமாக இருந்தது.

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்எனும் பாடலைச் சொன்னார். நல்லப் பாடல். வீடு வரும்வரை தொடர்ந்து அப்பாடல் மனதுக்குள் ஓடியது. சட்டென பக்தியில் தொய்ந்த அவ்வரிகள் கொதித்தெழும் அறச்சீற்றம்போல் ஒலித்தது.

நன்றி -ம. நவீன், வல்லினம்