கோலாலம்பூர்: நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஒன்றாக ஊழலை ஒழிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அரசாங்கம் என்றும் தாங்கி நிற்கும் என்று துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதனை கையாளும் வகையில், இவ்வாண்டு தொடக்கத்தில் தேசிய ஆளுமை, நேர்மை மற்றும் ஊழல் தடுப்பு மையம் (ஜிஐஏசிசி) அமைக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு மக்களவை ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது குறித்தும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
“இந்த சொத்து அறிவிப்பில் கணவன் அல்லது மனைவி, குழந்தை மற்றும் அறங்காவலர் ஆகியோரின் சொத்துகள் அடங்கி உள்ளது” என்று அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கங்களிடையே மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளிடையேயும் ஊழலை எதிர்த்துப் போராடும் நடைமுறையை இது வலியுறுத்துகிறது என்று அசிசா தெரிவித்தார்.
ஒரு நல்லாட்சியின் போது பொறுப்புகள் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்றுக்கொள்வது என்பது அரசாங்கத்தின் ஒரு கூறாக இருக்க வேண்டும் என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சருமான வான் அஜிசா கூறினார்.
கூடுதலாக, முந்தைய அரசாங்கம் கையெழுத்திட்ட பல ஒப்பந்தங்கள் ஒரு தரப்பை மட்டும் சார்ந்து, நியாயமற்ற மதிப்பைக் கொண்டிருப்பதாக அரசாங்கம் கண்டறிந்துள்ளதாக அவர் கூறினார்.
ஆனால், இம்மாதிரியான நிலைமையை சரிசெய்யும் பொருட்டு, அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றான சமூகத்தின் நலனை அரசாங்கம் மறக்கவில்லை எனவும் அசிசா தெரிவித்தார். .