கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 19-ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா பள்ளி வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஹ்மி பட்சில் கலந்து கொண்டு நேரடியாக இந்த நூல்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
நூல்களை இலவசமாக வழங்கி விவேகானந்தா, பங்சார் தமிழ்ப் பள்ளி மாணவர்களிடையே உரையாற்றிய, பாஹ்மி பட்சில் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, “யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த நூல்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க முயற்சிகள் எடுத்திருக்கிறேன்” என்று கூறினார்.
யுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்காக வி ஷைன் தயாரித்து வெளியிட்டிருக்கும் ஐந்து தேர்வு வழிகாட்டி நூல்களில் ஆங்கிலப் பாடப் புத்தகத்தை ஏற்கனவே, டத்தோ சுந்தர் டான்ஸ்ரீ சுப்பிரமணியம் தலைமையில் இயங்கும் ஓசை அறவாரியம் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் அனைத்து யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது உரைக்குப் பின்னர் ஒவ்வொரு மாணவருக்கும் நேரடியாக நூல்களை எடுத்து வழங்கிய பாஹ்மி பட்சில், நிகழ்ச்சி முடிந்தவுடன் மாணவர்களுடன் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் விவேகானந்தா, மற்றும் பங்சார் தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்திய பாஹ்மி பட்சில் தனது தொகுதியின் கீழ்வரும் விவேகானந்தா மற்றும் பங்சார் தமிழ்ப் பள்ளிகளின் நிலவும் பிரச்சனைகளையும் கேட்டு அறிந்து கொண்டு, அதற்காகத் தன்னால் இயன்ற தீர்வுகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.