கோலாலம்பூர்: வெளிநாட்டு குடியேறிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு உதவ அமர்வு நீதிமன்ற நீதிபதி ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாங்கூரிலுள்ள கோலா குபு பாரு அமர்வு நீதிமன்றத்தில் அந்நீதிபதி பணியாற்றி வருவதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீஃபா கோயா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அக்கைதின் போது குறிப்பிடத்தக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக லத்தீஃபா தெரிவித்தார்.
இந்த கைது நடவடிக்கை, சமீபத்தில் ஒரு வழக்கறிஞர், ஒரு துணை அரசாங்க வழக்கறிஞர் மற்றும் பல காவல் துறையினர் கைதான வழக்குடன் தொடர்பானவை என்று அவர் கூறினார்.
“சட்டவிரோதமாக குடியேறியவர்களை தடுத்து வைக்கப்பட்ட பின்னர் பணம் கொடுக்கப்பட்டதும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.” என்று அவர் கூறினார்.
சில நாட்களுக்கு முன்னர் ஒரு சோதனையின் போது ஒரு துணை அரசாங்க வழக்கறிஞர், ஒரு வழக்கறிஞர் மற்றும் ஆறு காவல் துறையினர் எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டதாக டி சன் தெரிவித்திருந்தது.