பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா வெற்றி பெற்றுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ்– மஜத கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் பதவி விலகியதால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கடந்த ஜூலை 22-ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது.
தொடர்ந்து, கர்நாடகத்தில் புதிய அரசு அமைக்க பாஜக முன் வந்தது. அக்கட்சியைச் சேர்ந்த எடியூரப்பா 26-ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்றார்.
கர்நாடக சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 224. இவர்களில் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதால், தற்போது சட்டசபை உறுப்பினர்களின் மொத்த பலம் 207.
இன்று திங்கட்கிழமை கூடிய சட்டப்பேரவையில், எடியூரப்பா, சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்டோர் பேசிய பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.
இதற்கிடையே, குமாரசாமி பாஜகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.