Home One Line P1 “தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” – சென்னையில் முத்து நெடுமாறன் உரை

“தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” – சென்னையில் முத்து நெடுமாறன் உரை

1244
0
SHARE
Ad

சென்னை – மலேசியாவின் கணினித் துறை நிபுணர் முத்து நெடுமாறன் எதிர்வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி சென்னை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெறும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் “”தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறார்.

“ஓர் இந்திய மொழிக்கான வரிவடிவத்தைக் கொண்டு முதன்முதலாக அச்சிடப்பட்ட நூல் 1577ம் ஆண்டில் அச்சிடப்பட்ட தமிழ் நூலே! அதற்கான எழுத்துருக்கள் கோவாவில் உருவாக்கப்பட்டன. இவ்வெழுத்துருக்கள் பெரிய அளவிலும் அவற்றில் இழுப்புகள் (stroke) ஒரே தடிமத்திலும் இருந்தன. இந்த எழுத்துருக்கள் ஒலைச்சுவடியில் எழுதப்பட்டு வந்த தமிழ் எழுத்துகளையே ஒத்து இருந்தன. இந்த வடிவங்கள் காலப்போக்கில் எவ்வாறு மாறின? எழுத்துருக்களின் தடிமம் எப்போது எவ்வாறு மாற்றப்பட்டன? இழுப்புகளின் தடிமத்தை எவை தீர்மானித்தன? இன்றைய மின்னுட்ப உலகில் எழுத்துருக்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன?” என இந்த சொற்பொழிவு குறித்த முன்னுரையில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் எழுத்துருக்களின் வடிவமைப்புப் பற்றியும் தமிழ் எழுத்துரு உருவாக்கத்தில் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தனது அனுபவங்களையும் முத்து நெடுமாறன் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுடன்  பகிர்ந்துகொள்ள உள்ளார்.

உரையாளர் முத்து நெடுமாறன் பற்றிய குறிப்பு:

#TamilSchoolmychoice

மேற்குறிப்பிட்ட சொற்பொழிவு நிகழ்ச்சிக்கான முன்னுரையில் முத்து நெடுமாறன் குறித்து பின்வருமாறு ஏற்பாட்டாளர்கள் விவரித்துள்ளனர்:

“எழுத்துருவாக்கத் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டவர் முத்து நெடுமாறன். 1970-களில் பள்ளி நிகழ்ச்சிகளுக்காகப் பதாகைகளில் தமிழ் வடிவங்களையும் ஆங்கில வடிவங்களையும் வரைவதில் தொடங்கியது அவரது ஆர்வம். சில பத்தாண்டுகள் கடந்தபின் அவரது உருவாக்கங்கள் மின்னியல் கருவிகளில் இடம்பெற்றன. வெறும் புள்ளிகளைக் கொண்டே கணினித் திரைகளிலும் தொடக்ககால அச்சுப்பொறிகளிலும் தமிழ் வடிவங்களைக் கண்டார் முத்து நெடுமாறன். அனைத்து இந்திய இந்தோ-சீன மொழிகளுக்கும் அவர் உருவாக்கிய எழுத்துருக்கள் ஆப்பிளின் மெக் கணினிகளிலும், ஐபோன் ஐபேட் கையடக்கக் கருவிகளிலும், சில ஆண்டிராய்டு கருவிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன. அமேசானின் கிண்டில் கருவியில் உள்ள தமிழ், மலையாள எழுத்துருக்கள் அவர் உருவாக்கியவையே. அவரின் இணைமதி என்னும் எழுத்துரு மலேசிய, சிங்கப்பூர் கல்வி அமைச்சுகளில் பயன்படுத்தப்படும் அலுவல் முறை எழுத்துருவாகும். எழுத்துருவாக்கத்தைத் தவிர, உள்ளிடுமுறைகளிலும் முத்து நெடுமாறன் பல ஆண்டுகளாகச் செயலிகளை உருவாக்கி வந்துள்ளார். கணினிகளில் புகழ் பெற்ற முரசு அஞ்சல் செயலியும், கையடக்கக் கருவிகளில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களை அடைந்துள்ள செல்லினமும் அவரின் உருவாக்கங்களே”