Home One Line P1 “2 ஆயிரம் ஏக்கர் – நான்தான் முதலில் ஆட்சிக் குழுவில் ஆய்வறிக்கையாக பரிந்துரைத்தேன்” வசந்தம் நேர்காணலில்...

“2 ஆயிரம் ஏக்கர் – நான்தான் முதலில் ஆட்சிக் குழுவில் ஆய்வறிக்கையாக பரிந்துரைத்தேன்” வசந்தம் நேர்காணலில் சிவநேசன் விளக்கம்

1521
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆர்டிஎம் 2 தொலைக்காட்சி அலைவரிசையில் வாரந்தோறும் ஞாயிற்றுகிழமைகளில் ஒளியேறும் ‘வசந்தம்’ நேர்காணல் நிகழ்ச்சியில் நேற்று (ஆகஸ்ட் 4) கலந்து கொண்ட பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன், நிகழ்ச்சி நடத்துநர் பாண்டித்துரை எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளித்ததோடு, பேராக் மாநில இந்தியர்களின் பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளிகள் மீது தனி அக்கறை காட்டிவருவதோடு, பல பள்ளிகளுக்கும் வருகை தந்து அந்தந்தப் பள்ளிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்து வருவதாகக் குறிப்பிட்ட சிவநேசன், மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ள தமிழ்ப் பள்ளிகளை, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு இடம் மாற்றுவதை முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

அடுத்ததாக, பேராக் மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப் பள்ளிகளில், 50 அரசாங்க முழுஉதவி பெறும் தமிழ்ப் பள்ளிகள் இருப்பதாகவும், அவற்றுக்கு சொந்த நிலங்கள் அந்தப் பள்ளிகளின் பெயரிலேயே இருப்பதை உறுதி செய்ய தாம் பாடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். “நகர்ப்புறத் தமிழ்ப் பள்ளிகளில் அவ்வளவாக பிரச்சனைகள் இல்லை. ஆனால் புறநகர்களில் 104 பள்ளிகளில் அமைந்திருக்கின்றன. இந்தப் புறநகர் பள்ளிகள்தான் தோட்டப்புறங்களில் அமைந்திருக்கின்றன. இங்கேதான் நான் குறிப்பாக கவனம் செலுத்தி வருகிறேன். காரணம், நகர்ப்புறப் பள்ளிகளுக்குத் தேவையான உதவிகளை அவர்கள் திரட்டிப் பெற்றுவிட முடியும். ஆனால் இந்த புறநகர் பள்ளிகளில்தான் ஏழை மாணவர்கள் படிக்கிறார்கள் என்பதோடு, இவர்களுக்குத்தான் உபகரணங்கள் போன்ற கூடுதல் உதவிகள் தேவைப்படுகிறது” எனவும் சிவநேசன் வசந்தம் நேர்காணலில் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

உதாரணமாக, கம்பார் தமிழ்ப் பள்ளிக்கு அண்மையில்தான் அதன் நிலத்தை அதற்கு உரிமையாக்கியதாகவும், ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தப் பள்ளி 0.6 ஏக்கர் சொந்த நிலத்தை தனியார் நிறுவனத்திடமிருந்து இழந்திருக்கிறது என்றும் சுட்டிக் காட்டிய சிவநேசன், இதன் காரணமாகவே, எல்லாப் பள்ளிகளுக்கும் அவை அமைந்திருக்கும் இடத்தை அவர்களுக்கே உரிமையாக்க பாடுபட்டு வருகிறேன் என்றும் கூறினார்.

தமிழ்ப் பள்ளிகளின் தரம் பற்றி யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்று கூறிய சிவநேசன் பேராக்கில் மொத்தம் உள்ள 1,600 ஆசிரியர்களில் 1,328 பேர் பட்டதாரி ஆசிரியர்கள் என்பதைச் சுட்டிக் காட்டினார்.

“பெரும்பான்மையான இந்தியர்கள் தமிழ்ப் பள்ளிகளில் படித்தாலும் இன்னும் பலர் சீனப் பள்ளிகளிலும், தேசியப் பள்ளிகளிலும் பயின்று வருகின்றனர். தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களும் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கடுமையாக உழைக்கின்றனர். பெற்றோர்களின் ஒத்துழைப்பும் இருந்தால் தமிழ்ப் பள்ளிகளின் தரமும் உயரும், அங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும்” என்றும் சிவநேசன் தெரிவித்தார்.

மாநில அரசாங்கத்தின் 1 மில்லியன் ரிங்கிட் கல்வி உதவி நிதி

பேராக் மாநில அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் 1 மில்லியன் ரிங்கிட் இந்திய சமூகக் கல்வி நிதியாக ஒதுக்குவதாகவும், இந்த நிதி தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும், கல்வியைத் தொடர முடியாமல் சிரமப்படும் மாணவர்களுக்கு உதவுவதற்கும் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

2 ஆயிரம் ஏக்கர் நில விவகாரம்

பலரும் பல கோணங்களில் கருத்து தெரிவித்து வரும் பேராக் மாநிலத்தில் இந்தியர் கல்வி மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டிருக்கும் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் குறித்தும் நேர்காணல் நடத்திய பாண்டித்துரை, சிவநேசனிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சிவநேசன் “2008-இல் ஆட்சிக்கு வந்த அப்போதைய பக்காத்தான் ராயாட் அரசாங்கம், பேராக் மாநிலத்திலுள்ள தனியார் சீனப் பள்ளிகளும், தனியார் இஸ்லாமியப் பள்ளிகளும் பிரச்சனைகளின்றி இயங்குவதற்கு உதவி புரியும் வகையில் அவர்களுக்கு தலா இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை பேராக் மாநில அரசாங்கம் ஒதுக்கியது. அந்தப் பள்ளிகளை நடத்துவதற்கான முறையான நிர்வாக முறையின் கீழ் அவை இயங்கி வந்தன. நான் அப்போதைய ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் இதே போன்று மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் தமிழ்ப் பள்ளிகளுக்கும் இவ்வாறு நிலம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் அப்போதைய பேராக் மந்திரி பெசார் முகமட் நிசார் ஜமாலுடின். ஆனால் பேராக் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கு என முறையான ஒருங்கிணைக்கப்பட்ட நிர்வாக அமைப்பு இல்லை என்பதால் இந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை எப்படி நிர்வகிப்பது, யாருக்கு வழங்குவது என்பது போன்ற விவரங்களை ஓர் ஆய்வறிக்கையாக சமர்ப்பிக்கும்படி நான் ஆட்சிக் குழுவால் கேட்டுக் கொள்ளப்பட்டேன். நானும் அவ்வாறே சமர்ப்பித்தேன். ஆனால், அதுகுறித்து முடிவெடுக்கும் முன்பாக பேராக் மாநில பக்காத்தான் ராயாட் அரசாங்கம் கலைக்கப்பட்டது” என்றார்.

எனினும், அடுத்து வந்த தேசிய முன்னணி அரசாங்கம் பேராக்கில் மிகக் குறுகிய இடங்கள் வித்தியாசத்தில் ஆட்சி அமைத்த காரணத்தால் இந்தியர்களைக் கவரும் பொருட்டு, 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது எனக் கூறிய சிவநேசன் தற்போதைய பிரச்சனை நிலம் யார் கொடுத்தது என்பதல்ல, மாறாக இது எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பதுதான். “இந்த நிலத்தை நிர்வகிக்கும் அறவாரியத்தில் மாநில அரசாங்கப் பிரதிநிதிகள் யாரும் இல்லை. அதே வேளையில் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கமும் இந்த நிலத்தை சிறந்த முறையில் பராமரித்து, இன்றைக்கு இங்கு அறுவடை செய்யும் அளவுக்கு மேம்படுத்தியுள்ளது. அவர்களின் பணிகளையும் பாராட்ட வேண்டும். 2008-இல் எனது பரிந்துரையிலேயே நான் அப்போது டத்தோ சகாதேவனிடம் பேசி இத்தகைய நிலத்தை மேம்படுத்த அவரது ஒப்புதலைப் பெற்றேன். எனவே அதில் பிரச்சனையில்லை. இப்போது அந்த நிலத்தில் சுமார் 200 ஏக்கர் வெறும் பாறைகளாக இருக்கின்றன. அதற்குப் பதிலாக நாம் இன்னும் கூடுதலாக 200 ஏக்கரை வழங்கச் சொல்லி கேட்கலாம். ஆனால் அதைக் கேட்பது யார்? ஓர் அரசாங்கப் பிரதிநிதிதானே அவ்வாறு கேட்க முடியும்? அதே வேளையில் கல்விப் பிரச்சனைகளுக்காக நாள்தோறும் என்னைத் தேடி இந்திய மாணவர்கள் வந்து, தங்களின் தேவைகளுக்காக எனது கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியர் கல்வி மேம்பாட்டுக்கென உருவாக்கப்பட்ட 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இருந்து என்ன வருமானம் வருகிறது? எவ்வளவு செலவு? எவ்வளவு இலாபம்? என்பது போன்ற விவரங்கள் எதுவும் இதுவரை பகிரங்கமாக வழங்கப்படவில்லை. அந்த நிலத்தின் வருமானத்தில் இருந்து ஏழை இந்திய மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வாருங்கள் என்றுதான் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். ஒரு சில இந்திய அமைப்புகளுக்கு நேர்ந்த நிலைமை இந்த 2 ஆயிரம் ஏக்கருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற அக்கறையில்தான் இதனை நான் வலியுறுத்தி வருகின்றேன்” என்றும் சிவநேசன் வசந்தம் நேர்காணலில் கூறினார்.