கோலாலம்பூர்: அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் மலேசியாவில் உள்ள இந்தியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்போவதாக மனித வளத்துறை அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிறந்த அவருக்கு, மலேசிய விவகாரங்களை விமர்சிக்கவோ அல்லது உள்ளூர் சமூகங்கள் மீது அவதூறுகளை எழுப்பவோ எந்த நிலைப்பாடும் இல்லை என்றும், அவ்வாறு செய்வதற்காக இங்கே அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாயக் ஒரு வெளிநாட்டவர். அவர் வேறு நாட்டிலிருந்து தப்பியோடி வந்தவர். மலேசிய வரலாற்றைப் பற்றி சிறிதளவு அறிவைக் கொண்டு, மற்ற மலேசியர்களை வீழ்த்துவதற்கு, அவர்கள் நாட்டின் மீது கொண்டுள்ள விசுவாசத்தை கேள்விக்குள்ளாக்குவது ஏற்கக் கூடியது அல்ல” என்று அமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
துன் டாக்டர் மகாதீர் முகமட்டை விட மலேசிய இந்தியர்கள், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிக விசுவாசமுள்ளவர்கள் என்று டாக்டர் ஜாகீர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
உள்ளூர் முஸ்லீம் ஆதரவின் காரணமாக சர்ச்சைக்குரிய மத போதகர் தனது வெளிப்படையாக, எந்த பிரச்சனையும் வராது என்று தைரியமாக உள்ளாரா என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இனவாத அரசியல் என்பது நாட்டில் மறுக்கமுடியாத ஓர் அங்கம் என்று குலசேகரன் ஒப்புக் கொண்டார். ஆயினும், மலேசியர்கள் அவற்றில் ஈடுபடும்போது ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் கவனமாக இருப்பதாக அவர் கூறினார்.
“எனவே, இனங்களுக்கு இடையில் உள்ள சகிப்புத்தன்மை மற்றும் இணக்கத்தை பயன்படுத்தி, ஜாகிர் அதனை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்துவது அம்பலமாகி உள்ளது. மலேசியர்கள் தேசத்தின் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஒன்றிணைத்து பாதுகாக்க வேண்டிய நேரம் இது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஜாகிர் நாயக் மலேசியாவை விட்டு வெளியேறி, இந்தியாவில் பயங்கரவாதம் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது” என்று அவர் வலியுறுத்தினார்.