சிரம்பான்: கோலாலம்பூர் மருத்துவமனையின் நோயியல் வல்லுநர்கள் குழு இன்று புதன்கிழமை காலை, துவாங்கு ஜாபார் மருத்துவமனையில் உள்ள தடயவியல் மருத்துவத் துறைக்கு நோரா அன்னின் பிரேத பரிசோதனைக்காக வந்தடைந்தனர் என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
நோரா அன்னின் குடும்ப உறுப்பினர்கள் என நம்பப்படும் இரண்டு நபர்கள், இன்று காலை 8.30 மணியளவில் தடயவியல் மருத்துவத் துறை வளாகத்தில் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து காவல்துறையினர் ஊடகத்தினரை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாவது நாளாக நேற்று செவ்வாய்க்கிழமை தொடர்ந்த தேடுதல் வேட்டையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நோரா அன் என்ற அயர்லாந்து பெண்ணுடையதுதான் என முதற்கட்ட பரிசோதனைகள் வழி கண்டறியப்பட்டது. நோரா அன்னின் பெற்றோர்களும் அது தங்கள் மகளின் சடலம்தான் என்பதை உறுதிப்படுத்தினர்.
நோரா அன் குடும்பத்தினர் தங்கியிருந்த உல்லாச விடுதியிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில், பந்தாய் குன்றுகள் பகுதியான குனோங் பெரெம்புன் என்ற பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.